சென்னை – இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக – ஆண் அரசியல்வாதிகளுக்கு நிகராக – தமிழகத் தேர்தலை கலக்கிக் கொண்டிருப்பது சில பெண் அரசியல்வாதிகள். அதிலும் ஆண் அரசியல்வாதிகளை விட திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இந்தப் பெண் அரசியல்வாதிகள் என்பதுதான் பளிச்செனத் தெரியும், சுவாரசியமான அம்சம்.
அந்தப் பெண்மணிகள் பற்றி ஒரு சுற்று பார்ப்போமா?
ஜெயலலிதா
இவரது பெயரை எழுதியதற்குப் பின்னர் அதற்கு மேல் இவரைப் பற்றி புதிதாக எழுதுவதற்கு எதுவுமில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்து விட்ட பெண் அரசியல்வாதியாகவும், தமிழக முதல்வராகவும் திகழ்கின்றார்.
இந்தத் தேர்தலிலும் வென்று மீண்டும் முதல்வராவார் என்பதுதான் பரவலான கணிப்பு.
எனவே, அவரை இதோடு விட்டுவிட்டு மற்றவர்களைப் பார்ப்போம்!
சசிகலா நடராஜன்
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா முன்னணிக்கு வராதவர் என்றாலும் பின்னணியில் இருந்து செயல்படுபவர்களின் முன்னணி அரசியல்வாதி யார் என்றால் அது சசிகலாதான்!
இன்றைக்கு அதிமுகவின் சட்டமன்ற வேட்பாளர்கள் முதல் நடப்பு அமைச்சர்கள் வரை அனைவருமே சசிகலாவின் கண் ஜாடைக்கு ஏங்கிக் கிடப்பவர்கள்தான். ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்குக்கும் சசிகலாதான் காரணம் என்கிறார்கள். இன்றைக்கு ஓபிஎஸ்-சின் வீழ்ச்சிக்கும் பின்னணியில் இருப்பவர் சசிகலாதான் என்கிறார்கள்.
அந்த வகையில், பின்னணியில் இருந்து கொண்டே – அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என எதிர்பார்க்கப்படும் அதிமுகவின் பின்னணியில் – அதுவும் ஜெயலலிதாவின் பக்கத்தில் இருந்து தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் முக்கிய சக்தி சசிகலாதான்.
இந்த முறை சசிகலா சட்டமன்ற உறுப்பினராக களமிறக்கி விடப்படுவாரா என்பது அதிமுக வட்டாரங்களில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கேள்வி!
தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு என்றும் பேச முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த தருணத்தில், தமிழகத் தேர்தலில் தேமுதிக எப்படி பிரச்சாரத்தில் ஈடுபடப் போகின்றது என தொண்டர்களும், அரசியல் பார்வையாளர்களும் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் புயலெனப் புறப்பட்டு, தனியொரு பெண்ணாக கட்சியைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளார் பிரேமலதா!
விஜயகாந்தின் மனைவி என்ற அறிமுகத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்தவர் இன்று ஜெயலலிதாவுக்கு நேருக்கு நேர் சவால் விடுவதிலிருந்து –
கருணாநிதியின் திமுகவை விமர்சிப்பதாகட்டும் – தேமுதிகவில் கொள்கை வகுக்கும் பிரச்சாரங்களை அறிவிப்பதிலாகட்டும் –
வைகோ போன்ற பழம் பெரும் பிரச்சார பீரங்கிகளுடன் சரிசமமாக மேடையில் நின்று உரையாற்றுவதிலாகட்டும் – பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக் கணைகளை எதிர்கொள்வதாகட்டும் –
தனது கட்சிக்கு எதிராகவும், கணவருக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதாகட்டும் –
இப்படி எல்லாவற்றிலும் இன்று தமிழக அரசியலை கலக்கி வருகின்றார் பிரேமலதா. இவர் இந்த அளவுக்கு விசுவரூபம் எடுப்பார் என்று யாருமே கணித்திருக்கமாட்டார்கள்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அடுத்து தமிழக அரசியலில் முன்னணி வகிக்கும் பெண் அரசியல்வாதி இன்றைக்கு பிரேமலதாதான்!
திமுக – கனிமொழி கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆண் வாரிசுகள் ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டு நிற்க, பெண் வாரிசான கனிமொழி இன்றைக்கு திமுகவின் தவிர்க்க முடியாத மகளிர் பிரச்சார பீரங்கியாக மாறியிருக்கின்றார்.
கலைஞரின் மகள் என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும் –
2ஜி ஊழல் குற்றச்சாட்டில் மாதக்கணக்கில் சிறைவாசம் – இன்னும் அந்த வழக்கு முடியவில்லை – கண்ணில் படாத கணவர் –
என்பது போன்ற எதிர்மறை அம்சங்களின் மத்தியில் திமுக அரசியல் மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றார் கனிமொழி. தற்போது டில்லியில் மேலவை உறுப்பினராக இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் கனிமொழி நிற்க வாய்ப்பில்லை என்றாலும் திமுக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக கனிமொழி உருவெடுத்துள்ளார்.
பாஜக – தமிழிசை சௌந்தரராஜன்; வானதி சீனிவாசன்
பாஜகவின் தமிழகத் தலைவராக ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரசின் அந்நாளைய முன்னணித் தலைவர்களில் ஒருவரும், காமராஜரின் விசுவாசத் தொண்டர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் புதல்வி. ஆனால், அரசியல் களப்பணி ஆற்றுவதோ காங்கிரசின் நேர் எதிர் கட்சியான பாஜகவில்!
ஆண் அரசியல்வாதிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக அரசியலில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சி ஒன்றின் தமிழக மாநிலத் தலைவராக, சூடு பறக்கும் சட்டமன்றத் தேர்தல் சூழலில், யாருக்கும் நான் சளைத்தவளில்லை என்னும் விதமாக பரபரப்பாக இயங்கி வருகின்றார் தமிழிசை.
தொலைக்காட்சி விவாதங்கள் என்று வந்தால், பாஜகவின் சார்பாக ஆண் அரசியல்வாதிகளுக்கு இணையாக சரிசமமாக மோதுபவர் வழக்கறிஞரான வானதி சீனிவாசன். தமிழிசைக்குத் துணையாக, பாஜக-வை மக்கள் மன்றத்தில் தூக்கிப் பிடிப்பதில் முன்னணி வகிப்பவர் இன்றைக்கு வானதி சீனிவாசன்தான்!
கோவையில் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார் என்பது வானதிக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு கௌரவம்!
காங்கிரஸ் – குஷ்பு
சட்டமன்ற உறுப்பினராக குஷ்பு காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவாரா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பிரச்சாரம் தொடங்கியவுடன் காங்கிரஸ் நம்பிக் கொண்டிருக்கும் பிரச்சார பீரங்கிகளில் ஒருவர் குஷ்புதான்.
சினிமா பிரபல்யம், அடிக்கடி உதிர்க்கும் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் சர்ச்சையில் சிக்கும் தன்மை – இன்றும் தொடரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் கிடைக்கும் அறிமுகம் – இவற்றால் தமிழகம் முழுவதும் நன்கு தெரிந்த முகமாக குஷ்பு இருப்பது காங்கிரசுக்கு இன்றைய நிலையில் கண்டிப்பாக ஒரு பலம்தான்!
சௌமியா அன்புமணி
பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் என்றால், அவருக்குப் பின்னால் ஒரு முக்கிய சக்தியாக இன்றைக்கு சலனப்படாமல், சத்தமில்லாமல் உருவாகியிருப்பவர் அவரது மனைவி சௌமியா.
காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் இன்றைக்கு அன்புமணியின் மனைவியாக பாமகவில் ஐக்கியமாகிவிட்டார். அன்புமணிக்கு அடுத்து பாமகவில் முன்னிறுத்தப்படும் முகம் சௌமியாதான்!
பாமக சார்பாக சௌமியா சட்டமன்ற வேட்பாளராக களமிறக்கப்படுவாரா என்பது தமிழக அரசியல் வட்டாரங்களும், பாமகவினரும் தற்போது எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வி!
அன்புமணி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தருமபுரி தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் சௌமியா நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன.
பார்வைக்கு அழகான தோற்றம் கொண்டவர் என்பது சௌமியாவுக்கு இருக்கும் இன்னொரு கூடுதல் பலம்!
எல்லாக் கட்சிகளிலும் தலா ஒருபெண் அரசியல்வாதி களமிறக்கப்பட்டு கலக்கிக் கொண்டிருக்க, பாமகவில் மட்டும் காலியாக இருக்கும் அத்தகைய ஓர் இடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருப்பவர் சௌமியா.
பாமகவின் இணை இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் பசுமைத் தாயகத்தின் வழியாக அரசியல் மேடைகளில் வலம் வந்து கொண்டிருப்பவர் சௌமியா.
அன்புமணியின் பிரச்சார வியூகங்களை வகுப்பதில் இருந்து – புதுப் புது தகவல்களை சேகரித்துக் கொடுப்பது வரையிலாகட்டும் – அவரது நடை,உடை, பாவனை, தோற்றங்களை வடிவமைப்பது வரை பல முனைகளில் சௌமியா முக்கிய பங்கு வகிக்கின்றார் என்கின்றன பாமக வட்டாரங்கள்.
ஆக, இந்த பெண்மணிகள்தான் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்திலும், பிரச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றார்கள்!
இனி எப்படிக் கலக்கப் போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்!
இவர்களைத் தவிர, இரண்டாம் கட்ட பெண் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் இன்னொரு பட்டியலும் உண்டு!
அதிமுகவின் சி.ஆர்.சரஸ்வதி, நடிகை விந்தியா, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரசின் நடிகை நக்மா, விஜயதாரணி, என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்!
-இரா.முத்தரசன்