காஷ்மீர் – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி இன்று பதவி ஏற்கிறார். ஜம்மு ஆளுநர் மாளிகையில் காலை 11 மணி அளவில் இதற்கான விழா நடக்கிறது.
அவருக்கு ஆளுநர் பதிவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். முஃப்தி உடன் 20 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகியோருக்கும் முஃப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிஜேந்திர சிங் ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கின்றனர். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முஃப்தி முகமது சயித், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகளான மெஹபூபா முஃப்தி முதலமைச்சர் ஆகிறார்.
மொத்தம் 87 இடங்களை கொண்ட ஜம்மு – காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 27 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 25 இடங்களும் உள்ளன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீர் மாநிலத்தில் முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதிய ஜனதாவும் இணைந்து கூட்டணி கட்சி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.