கோலாலம்பூர் – தேர்தல் மட்டும் முறைப்படி நடந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
“ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், இடையூறுகள் இன்றி, வாக்குப்பெட்டிகளில் விளையாடாமல் நடைபெற்றால், பாரிஷான் தோல்வியடையும் என்று நான் நினைக்கின்றேன்” என்று மகாதீர் இன்று கூறியதாக சிங்கப்பூரின் ‘த ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் எதிர்கட்சிகள் பலவீனமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் கூட பாரிஷான் தோல்வியுறும் வாய்ப்பு இருப்பதாக கோலாலம்பூரில் இன்று ‘த ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திகையின் மலாய் பதிப்பான ‘பெரித்தா மிங்கு’-விற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்கட்சிகள் அவ்வளவு வலுவாக இல்லை. அவர்கள் உடைந்து விட்டார்கள். அவர்களுக்குள் பிரச்சனைகள் உள்ளன. நிச்சயமாக சிக்கல் வாய்ந்த பல பிரச்சனைகள் உள்ளன” என்று மகாதீர் தெரிவித்ததாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.