பனாமா – அனைத்துலக அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘பனாமா’ பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு பத்திரிகையாளர்களின் அனைத்துலக கூட்டியக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியது.
இதில் பாகிஸ்தான் பிரதமர், ரஷ்யா அதிபர் புடின் உதவியாளர்கள், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி உள்பட உலக நாடுகளின் 140 அரசியல் தலைவர்கள் பனாமா நாட்டில் பணம், சொத்து பதுக்கி வைத்து இருப்பது அம்பலமானது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் அதிபர், செளதி மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் 140 அரசியல் தலைவர்கள் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயரும் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய் இதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில் பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவகாரங்களை வரவேற்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமரின் ஆலோசனையின் படி இந்த விவரங்களை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்; இந்த பட்டியலில் உள்ள எவருமே தப்ப முடியாது என்றார்.
கருப்புப் பண விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் கூறும்போது, அமலாக்க இயக்குனரகம், வருமானவரித் துறை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகம் ஆகியவை இந்த பனாமா பட்டியலை ஆராய்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.
இதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். சிறப்பு விசாரணைக் குழுவிடம் இந்த பனாமா பேப்பர்ஸ் விவரங்கள் இல்லை. விசாரணை அமைப்புகள் வைத்திருக்கலாம். எனவே இவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பிறகு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.