சென்னை – கருணாஸ் ஆரம்பித்தது கட்சி கூட அல்ல. முக்குலத்தோர் பெயரில் ஒரு இயக்கம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். திருவாடனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் கருணாஸை தொடர்பு கொண்டபோது, உற்சாகம் பொங்கப் பேசினார்.
கேள்வி: முதல்வர் உங்களுக்கு சீட் கொடுப்பாங்கன்னு எதிர்ப்பாத்தீங்களா?
பதில்: நிச்சயமா எதிர்ப்பார்க்கல. நான் அம்மாவைப் பார்த்து ஆதரவு கொடுத்தது சீட் கேட்பதற்காக அல்ல. எங்களுக்கும் ஒரு அங்கீகாரம் வேணும். சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யணும். எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சிதான்.
கேள்வி: நடிகர் சங்கத் தேர்தல்ல கடுமையா மோதிக்கிட்ட நீங்களும் சரத்குமாரும் இப்போ ஒரே அணியில்… இதை எப்படிப் பாக்கறீங்க?
பதில்: நாங்க எங்கே மோதிக்கிட்டோம்? இருவரும் அடிப்படையில் நடிகர்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள். எதிரெதிர் அணியில் நின்று போட்டியிட்டோம். தேர்தல் முடிந்த உடனே அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது இருவரும் அரசியல் களத்தில் ஒன்றாக இருக்கிறோம். சரத்குமார் மூத்தவர். அரசியலில் நல்ல அனுபவசாலி. அவரது அனுபவம் என் வெற்றிக்கும் உதவும்னு நம்பறேன்.
கேள்வி: இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் பிரச்சாரம் பண்ணுவீங்களா?
பதில்: நிச்சயமா.. அதிலென்ன சந்தேகம். எனக்காக சரத்குமாரும், அவருக்காக நானும் பிரச்சாரம் பண்ணுவோம். இருவரும் இணைந்து அதிமுக வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்வோம்!