கோலாலம்பூர் – நேற்று வெளியிடப்பட்ட 1எம்டிபி தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழு அறிக்கையைத் தொடர்ந்து, அனைத்துப் பார்வைகளும் தற்போது அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாருல் அஸ்ரால் இப்ராகிம் ஹால்மியை நோக்கித் திரும்பியிருக்கின்றது.
காரணம், 1எம்டிபியில் நடந்த முறைகேடுகளில் நஜிப்புக்கு சம்பந்தமில்லை என்றும், அதன் இயக்குநர் வாரியம்தான் இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஷாருல் தனது நிர்வாகத்தின் கீழ் 1எம்டிபியில் முறைகேடுகளோ, சட்டவிரோத செயல்பாடுகளோ நடைபெறவில்லை என அறிவித்துள்ளார்.
நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், தனது தரப்பு நியாயத்தை ஷாரோல் எடுத்துரைத்துள்ளார். 1எம்டிபி மீது நடத்தப்பட்ட நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழு விசாரணையின்போது, அந்தக் குழுவின் முன்தோன்றி, முழுமையான, உண்மையான, விளக்கங்களைத் தான் தந்திருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எல்லா விசாரணைகளிலும் தனது ஒத்துழைப்பைத் தரப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தனக்குத் தெரிந்தவரையில் தான் எந்தவித தவறையும் செய்யவில்லை என்றும் மறைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை என்றும் ஷாரோல் தெளிவுபடுத்தியுள்ளார்.