புதுடெல்லி – ஐபிஎல் 9-ஆவது சீசனின் முதல் போட்டி நாளை 9-ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று மாலை கோலாகல துவக்க விழா நடக்கிறது.
இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் கேத்ரினா கைப், ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனிடையே துவக்க விழாவின் போது, வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவரான குஜராத் லயன்ஸ் அணி வீரர் பிராவோ, தனது சாம்பியன் பாடலுக்கு நடனமாடுகிறார்.
இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், மும்பையில் நடக்கும் ஐபிஎல் 9-ஆவது சீசனின் துவக்க விழாவில், சாம்பியன் பாடலுக்கு பிராவோ நடனமாடுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் நடனமாடுகின்றனர்.
ஐபிஎல்லில் முதல் முறையாக இந்த தொடரில் எல்இடி ஸ்டம்புகளும் பயன்படுத்தப்படுகின்றன என்றார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிரும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டன.
அதன்பின் 2014-ஆம் ஆண்டில் இருந்து ஐசிசி டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை தொடர்களிலும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஐபிஎல்லில் முதல் முறையாக இந்த முறைதான் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.