Home Featured தொழில் நுட்பம் செல்லினத்தின் பதிவிறக்கம் ஆண்டிராய்டில் 500,000ஐத் தாண்டியது!

செல்லினத்தின் பதிவிறக்கம் ஆண்டிராய்டில் 500,000ஐத் தாண்டியது!

1295
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செல்பேசித் தளங்களில் தமிழில் தட்டெழுதுவதற்காகவே  உருவாக்கப்பட்டக் குறுஞ்செயலி செல்லினம். தமிழ்க் கணினித் துறையிலும், தமிழ் மென்பொருள் வடிவமைப்புத் துறையிலும் நீண்ட காலமாக பல்வேறு முன்னோடித் தொழில்நுட்பங்களை உருவாக்கி வெளியிடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் முத்து நெடுமாறனின் சிந்தனையிலும், வடிவமைப்பிலும் உருவானது செல்லினம்.

2005ஆம் ஆண்டில் செல்லினம் அறிமுகப்படுத்தப்பட்ட விழாவில் உரையாற்றிய கவிப் பேரரசு வைரமுத்து “தமிழில் ஏற்கனவே மெல்லினம், இடையினம், வல்லினம் என்ற இலக்கணப் பிரிவுகள் இருக்கின்றன. செல்லினத்தை இனி நான்காவது இனமாக அழைக்கலாம்” என்று பாராட்டினார்.

அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் செல்லினம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

செல்பேசிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆண்டிரோய்டு தொழில்நுட்பத்தின் ‘கூகுள் பிளே’ தளத்தில் இலவசமாகப் பதிப்பிக்கப்பட்ட செல்லினத்தின் பதிவிறக்கம், இன்று 500,000ஐ (5 இலட்சத்தைத்) தாண்டியுள்ளது!

இந்தத் தளத்தில் 2012ஆம் ஆண்டு இறுதியில் செல்லினம் வெளியிடப்பட்டது. சராசரி கணக்கெடுத்துப் பார்க்கும் போது ஒரு நாளில் 500 பேர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்!

நோக்கியா செல்பேசிகளுக்காக 2005ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட செல்லினம், 2009ஆம் ஆண்டு ஆப்பிள் கருவிகளுக்கான சிறப்புப் பதிப்பாக மறுவடிவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு எச்.டி.சி. நிறுவனம் அறிமுகப்படுத்திய எக்சுபுளோரர் கருவியின் இயங்குதளத்திலேயே சேர்க்கப்பட்டது. இதுவே ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கான செல்லினத்தின் முதல் பதிப்பாக அமைந்தது. 2012ஆம் ஆண்டு திசம்பரில் கூகுள் பிளே தளத்திற்காக மறுவடிவம் கண்டது. இன்று, ஆண்டிராய்டு கருவிகளில் மட்டும் செல்லினத்தின் பதிவிறக்கம் 500,000ஐ தாண்டியிருப்பதோடு, 4.4 சராசரி மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இந்தத் தமிழ் உள்ளிடுமுறை பயனர்களை எவ்வாறு ஈர்த்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.

செல்லினத்தின் பதிவிறக்கம் 500,000ஐ தாண்டியுள்ளது!

எட்டாயிரத்திற்கும் மேற்பட்டப் பயனர்கள் கூகுள் பிளே தளத்தில் செல்லினத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் அளித்துள்ள மதிப்பெண்களின் சராசரி, ஐந்துக்கு 4.4ஐ அடைந்துள்ளது. கூகுள் பிளே கடையாக இருந்தாலும் சரி, ஆப்பிள் ஆப் சிட்டோர் கடையாக இருந்தாலும் சரி, இத்தனைப் பயனர்களைக் கொண்ட ஒரு செயலி முழுமையான 5.0 மதிப்பெண்களைப் பெறுவது கடினம்தான். ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட முகநூல் செயலிக்கே 4.0 சராசரி மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளன.

செல்லினத்தில் உள்ள அஞ்சல், தமிழ்99 என்னும் இரண்டு விசைமுகங்களுக்கும் நிறைந்த பயன்பாடு இருப்பது பயனர்களின் கருத்துகள் வழி தெரிய வருகின்றது.  அதிகமாகத் தமிழில் எழுதுபவர்கள் தமிழ்99-இலும், அவ்வப்போது தமிழில் எழுதுபவர்கள் அஞ்சலிலும் தட்டெழுதுகிறார்கள். இவ்விரு விசைமுகங்களின் நோக்கமும் அதுவே!

செல்லினம் வழங்கும் பரிந்துரைகளையும் சிறுசிறு பிழைதிருத்தங்களையும் அதிகமானோர் விரும்புவதும் அவர்கள் எழுதும் கருத்துகளின் வழி தெரியவந்துள்ளது. இன்னும் சிலர், இந்தக் கூறுகளுக்காகவே செல்லினத்தை அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

உலகளாவிய பயனர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவில் உள்ளனர்.  இதில் வியப்பொன்றும் இல்லை. அடுத்தடுத்த நிலைகளில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என இந்த வரிசை தொடர்கிறது.

நாடு வாரியாக செல்லினத்தின் பதிவிறக்கம்

ஆண்டிராய்டு கருவிகளுக்கான செல்லினத்தின் பதிவிறக்கம் குறித்துக் கருத்துரைத்த செல்லினத்தின் உருவாக்குனரான முத்து நெடுமாறன், “பதிவிறக்க எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. எங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுத முடிகிறதோ அங்கெல்லாம் தமிழிலும் தடையின்றி எழுத முடியவேண்டும் என்பதே எங்கள் கனவு. இது நிறைவேறுவதற்கு பயனர்களின் பங்கே தலையாயது. இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அதற்காக செல்லினத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்! பயனர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் கருத்தூன்றி கேட்டுவருகின்றோம். தகுந்தவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகின்றோம்! இவை பயனர்களிடையே தமிழில் எழுதும் ஆர்வத்தை மென்மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்களுக்காக, செல்லினத்தின் கூகுள் பிளே தளம்:  Sellinam