பெர்லின் – வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள தகவல்கள், உலக நாடுகளில் எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை காட்டுகின்றன.
இந்த ஊழலில் ரஷிய அதிபர் புடின் முதல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வரை பலரும் பலன் அடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் முதலில் கசிந்தபோது மறுத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இப்போது ‘பனாமா லீக்ஸ்’ விவகாரத்தில் பலன் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சி.என்.என். நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஐ.டி.வி. நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நானும் எனது மனைவி சமந்தாவும் எனது தந்தை உருவாக்கிய பிளெயிர்மோர் டிரஸ்ட்டில் 5 ஆயிரம் பங்குகள் வைத்திருந்தோம்.
ஆனால் இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பாக அவற்றை 30 ஆயிரம் பவுண்டுக்கு விற்பனை செய்து விட்டோம்” என ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் பனாமா போன்ற நாடுகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பு அளிக்காமல் வரி ஏய்ப்புக்கு தொடர்ந்து உதவினால், அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த யூனியனின் நிதி விவகாரங்கள் துறை தலைவர் பியர் மோஸ்கோவிசி கூறியதாவது:- ‘பனாமா லீக்ஸ்’ விவகாரத்தில் தொடர்புடைய பணத்தின் அளவு, தொடர்புடைய நாடுகள், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன.
பனாமா போன்ற நாடுகள் இதில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அந்த நாடுகள் மாற்றிக்கொள்ள மறுத்தால் (வரி ஏய்ப்புக்கு துணைபோனால்) அவர்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதிக்கும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார்.