மும்பை – வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமானத் தொடக்க விழாவுடன் தொடங்கியுள்ள ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் ரைசிங் பூனே சூப்பர் ஜயண்ட்ஸ் குழுவும், மும்பை இந்தியன்ஸ் குழுவும் மோதின.
பூனே குழு இந்த ஆண்டுதான் புதிதாக உருவாக்கப்பட்ட குழு என்பதோடு, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) மகேந்திர சிங் தோனி இந்தக் குழுவுக்கு தலைமையேற்றிருக்கின்றார்.
முன்பு சென்னை சூப்பர் கிங் அணிக்குத் தலைவராக இருந்தவர் தோனி. சில பிரச்சனைகளால் சென்னை சூப்பர் கிங் தடை செய்யப்பட, அதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்று பூனே சூப்பர்ஜயண்ட்ஸ். மற்றொன்று குஜராத் லயன்ஸ்.
பூனே குழுவுக்கும், மும்பை இந்தியன்ஸ் குழுவுக்கும் இடையிலான நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை எடுத்தனர்.
122 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பூனே அணி 14.4 ஓவர்கள் முடிவடைந்த போதே 126 ஓட்டங்களை எடுத்து, ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்தது.
இதனைத் தொடர்ந்து பூனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது.