திருவனந்தபுரம் – கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் வட்டாரத்திலுள்ள பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.
சம்பவ இடத்தை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேரளா புறப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கொல்லம் தீவிபத்தைத் தொடர்ந்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வரிசையாக வெளியிட்ட செய்திகள்…
இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கைகள், பட்டாசுகள் வெடிப்புகள் காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதிகாலை 1.00 மணிக்கு புட்டிங்கல் அம்மன் ஆலயத்தின் திருவிழா நிறைவாக பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அப்போது அருகில் ஒரு சேமிப்புக்கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் குவியலில் தீப்பொறிகள் பட்டு, அதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புகள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை இந்திய நேரம் காலை 8.30 மணியளவில் 86 என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருப்பதால், உயிர் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.