Home Featured இந்தியா கொல்லம் தீவிபத்து: மரண எண்ணிக்கை 110 ஆக உயர்வு – 350 பேர் காயம்! சம்பவ...

கொல்லம் தீவிபத்து: மரண எண்ணிக்கை 110 ஆக உயர்வு – 350 பேர் காயம்! சம்பவ இடத்திற்கு மோடி வருகை!

660
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – கொல்லம் வட்டாரத்தில் உள்ள பரவூர் ஒட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லம் வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

Narendra Modi- visiting-Kollam fire victimsகொல்லம் வட்டார மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் மோடி – உடனிருப்பவர் முதலமைச்சர் உம்மன் சாண்டி…

#TamilSchoolmychoice

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கொல்லத்தைச் சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளிலும்  பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துக்கான இணை அமைச்சர் ஜேபி நட்டாவை மாநில அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பிரதமர் மோடி பணித்துள்ளார்.

டில்லியின் முன்னணி மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 25 மருத்துவ நிபுணர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்படை மற்றும் ஆகாயப் படையின் ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்டவர்களை வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தீவிபத்தைப் பார்வையிட வருவதற்கு முன்னால் மோடி மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார்.

கொல்லத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த மோடியை கேரளா முதல்வர் உம்மன் சாண்டி வரவேற்று வாகனம் ஒன்றின் மூலம் சம்பவ இடத்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்றார்.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் செலவழித்த மோடி, விளக்கங்களைப் பெற்ற பின்னர் வாகனம் மூலம் கொல்லம் வட்டார மருத்துவமனைக்குச் சென்றார். இங்குதான் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அதன்பிறகு முதலமைச்சர் உம்மன் சாண்டியுடனும் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்து நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.