சென்னை – முன்பதிவில் சாதனை படைத்தாலும், சென்னையின் முக்கியத் திரையரங்குகளில், தெறி படத்தின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் படம் தெறி.
தாணு தயாரித்திருக்கும் இப்படம் வரும் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையின் முக்கியத் திரையரங்குகளாகக் கருதப்படும் காசி, வெற்றி உட்பட பல்வேறு திரையரங்குகளில், தெறி வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக அரசு டிக்கெட் விலையை அதிகமாக விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறு ஒரு எண்ணை அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பைக் காரணம் காட்டி, திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் தாணுவிடம், படத்தின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்துகிறார்களாம்.
ஆனால், தாணு படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதற்கு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு பகுதியிலும் தெறி வெளியீடு இன்னும் உறுதியாகவில்லையாம். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு முக்கிய பகுதியாகக் கருதப்படுவதால் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறதாம்.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் பட்சத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்குகள், தெறி வெளியீட்டை நாளை மாலைக்குள் இறுதி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.