நியூயார்க் – லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தம்முடைய பதவிக் காலத்தின் மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா, 2011-ஆம் ஆண்டு லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனது.
இதில் லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்த விவகாரத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார் என்றார். அதாவது லிபியாவில் அதிபராக இருந்த கடாபி புரட்சிக் குழுக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உருவெடுத்தது. அங்கிருந்துதான் உலகின் இதர நாடுகளுக்கும் ஐ.எஸ். இயக்கம் பரவியது.
லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தெளிவான திட்டத்துடன் களமிறங்கியிருந்தால் ஐ.எஸ். இயக்கத்தின் மூலமான பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஆகையால் லிபியாவில் நேட்டோ படைகளின் தலையீட்டை தமது பதவி காலத்தின் மிகப் பெரிய தவறாக ஒபாமா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் தமது பதவிக் காலத்தின் சாதனையாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை மீட்டதை குறிப்பிடலாம் எனவும் ஒபாமா கூறியுள்ளார்.