சென்னை: தமிழகத் தேர்தலில் இன்று வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக மக்களால் நட்சத்திரத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் மற்றொரு தொகுதி கொளத்தூர்.
திமுக பொருளாளரும், திமுக வென்று ஆட்சி அமைத்தால், செயல்வடிவில் முதலமைச்சராக பணியாற்றப் போகின்றவர் என்று எதிர்பார்க்கப்படுபவருமான மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் போட்டியிடுவதால்தான் கொளத்தூருக்கு நட்சத்திர அந்தஸ்து.
ஏற்கனவே, இவர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதாலும் – “நமக்கு நாமே” நடைப் பயணம் – கலைஞரின் மகன் – திமுகவின் அடுத்த தலைவர் – திமுக ஆட்சி அமைத்தால் கலைஞருக்குப் பின்னர் இவர்தான் வாரிசு – என்பது போன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாக தொகுதி வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் இவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
போட்டியிடும் மற்ற கட்சியினர் எத்தனை சதவீத வாக்குகளைப் பிரிக்கப் போகின்றனர் என்பதை வைத்துத்தான் ஸ்டாலின் பெறப்போகும் பெரும்பான்மை நிர்ணயிக்கப்படும். கடந்த தேர்தலில் ஸ்டாலின் 2,819 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பது இந்தத் தொகுதி அவருக்கு பாதுகாப்பான ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு அம்சம்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரன். இவர்தான் ஸ்டாலினுக்கு கடுமையான போட்டியை வழங்கியிருப்பவர். கடந்த 2011 தொகுதியில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் வழக்கறிஞரான பிரபாகரன்.
வலுவான வேட்பாளராகப் பார்க்கப்படும் அதிமுகவின் பிரபாகரன் ஒருபுறம் என்றால் அறிமுகமான மற்றொரு வேட்பாளர் பாஜகவின் கேடி.இராகவன். செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாக பலமுறை கலந்து கொண்டதால், தொலைக்காட்சி இரசிகர்களிடையே பிரபலமாகத் திகழ்பவர் இவர்.
ஆனால், அந்த தொலைக்காட்சிப் பிரபல்யம், இராகவன் மூலமாக, பாஜகவுக்கு வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொளத்தூரில் கொடி நாட்டுவாரா ஸ்டாலின்? காத்திருக்கின்றது தமிழகம்!
-செல்லியல் தொகுப்பு