Home Featured கலையுலகம் கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்?

கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்?

1098
0
SHARE
Ad

rajini kabaliகோலாலம்பூர் – ‘கபாலி’ பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆமாம்.. அந்த அதிர்வில் சிறிதளவை கடந்த மே 1-ம் தேதி, வெளியான டீசரில் பார்த்துவிட்டோம். இன்னும் முழு அதிர்வை (மெயின்பிக்சர்) நாம் பார்க்கவில்லை. அதற்காக இன்னும் சில வாரங்கள் நாம் காத்திருந்தே ஆக வேண்டும்.

சரி.. கபாலியையும், மலேசியத் தமிழ் சினிமாவையும் ஏன் ஒப்பிட வேண்டும்? இதுவரை எத்தனையோ கோலிவுட் சினிமாக்கள் கடல் கடந்து மலேசியாவிற்கு வந்து படப்பிடிப்புகள் நடத்திச் சென்றிருக்கின்றன. ஏன் ரஜினி நடித்த ‘பிரியா’ படம் கூட மலேசியாவில் தான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டிருந்தது.

ஆனால் அப்போது இல்லாத உற்சாகம், பரபரப்பு இப்போது மட்டும் ஏன்?

#TamilSchoolmychoice

காரணம், கபாலியில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவை மையமாகக் கொண்ட கதை என்பது தான். வெள்ளையர்கள் காலத்தில் பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து, எஸ்டேட்கள் எனப்படும் தோட்டப்புறங்களில் பணியாற்றி இன்று மலேசியாவில் குடிமகன்களாக வாழ்ந்து வரும் மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்ட கதை என்கின்றனர் கபாலி திரைப்படத்துடன் நெருக்கமான மலேசியர்கள் சிலர்.

அவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் தான் டீசரிலும், தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்று சின்னங்கள் காட்டப்பட்டுள்ளது. ரஜினி கூட ஒரு காட்சியில் 1970 களில் மலேசியாவில் வாழ்ந்தவர்கள் போல் ஒப்பனை செய்து கொண்டு வருகின்றார். இக்கதை மலேசியாவில் வாழ்ந்த ‘பெந்தோங் காளி’ என்ற குண்டர் கும்பல் தலைவனைப் பிரதிபலிப்பதாகவும் சில ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

காரணம், ‘கபாலி’ என்று பெயர் வைப்பதற்கு முன்னர் ‘காளி’ என்று தான் பெயர் வைக்க திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி நடிப்பில் ஏற்கனவே ‘காளி’ என்ற பெயரிலான படம் உள்ளதால், கபாலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ, இது மலேசியாவில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து வரும் மலேசிய இந்தியர்களை மையப்படுத்தி வரும் ஒரு கதைக்களம் என்பது தெளிவாகின்றது.

கதைப் பஞ்சம்

உலக அளவில் சினிமாக்களுக்கு முன்னோடியாக ஹாலிவுட் இருப்பதைப் போல், உலக அளவில் தமிழ் சினிமாக்களுக்கு முன்னோடியாக கோலிவுட் (தமிழகத் திரைத்துறை) விளங்கி வருகின்றது. இன்றைய சூழ்நிலையில், தமிழக சினிமாவைப் பொறுத்தவரையில், கதைக்குத் தான் பஞ்சம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை எட்டிவிட்ட தமிழக சினிமாவில் இனி அரைக்க ஒன்றும் இல்லாத அளவிற்கு ஏராளமான கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துவிட்டன.

இந்நிலையில், புதிய கதைகளை தேடி தமிழக சினிமாவும், திறமையான இயக்குநர்களும் சிறகை விரித்துள்ளனர். ரசிகர்களுக்கு இனி அதே பழைய அரைத்த மாவை கொடுப்பதில்லை என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

அப்படி அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், பெரும்பான்மையான இயக்குநர்களின் கண்களில் படுவது, உலக அளவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான மலேசியா தான்.

ranji-kabaliமுன்னணி நடிகர்களுக்கும், அவர்களின் படங்களுக்கும் தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு மலேசிய ரசிகர்களிடத்தில் இருந்து வரவேற்பு கிடைத்து வருகின்றது. முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், தமிழகத்தைத் தாண்டி, உடனடியாக வியாபாரம் நடப்பதிலும், லாபம் தருவதிலும் மலேசியாவின் பங்கு இன்றியமையாதது.

எனவே, வியாபாரத்தில் கோலோச்சி வரும் தமிழக சினிமாவிற்கு, ‘கபாலி’ திரைப்படத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.

ஒன்று, புதுமையான கதையையும், கலாச்சாரத்தையும் காட்டி ரசிகர்களை மகிழ்விக்கலாம். இரண்டாவது, கபாலி திரைப்படத்தின் மூலம் மலேசிய சினிமாச் சந்தையில் புதிய கதவுகளைத் திறந்துவிடலாம்.

கபாலி திரைப்படம் மலாய் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்படுவதால், மலேசியாவில் அது வெளியாகும் போது, இனம், மொழி கடந்து ஒட்டுமொத்த மலேசியாவும் அதைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை கபாலி திரைப்படம் மலேசியாவில் வாழும் மற்ற இனத்தவர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெறும் பட்சத்தில், மலேசியர்களின் வாழ்க்கைச் சூழலுடன் ஒத்துப்போகும் தமிழ்ப் படங்கள், ஆண்டிற்கு ஒன்றாவது அடுத்தடுத்து வரத் தொடங்கிவிடும்.

அதேவேளையில், இந்தோனிசியாவிலும் முதல் முறையாக சுமார் 200 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகவுள்ள முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெயரையும் கபாலி பெறவுள்ளது.

கபாலியின் வருகைக்குப் பிறகு

முன்னணித் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வளர்ந்து வரும் திறமையான இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் மலேசியாவில் வெளியாகி வெற்றியடைந்த பிறகு என்ன நடக்கலாம் என்பதை யூகித்துப் பார்ப்போம்.

முதலில் கதை.. கதை என்று எடுத்துக் கொண்டால், மலேசியாவில் இருக்கும் ஏராளமான வரலாற்றுப் பூர்வ சம்பவங்களும், கதைகளும் இன்னும் திரைப்படங்களாகவோ, இலக்கியமாகவோ பதிவு செய்யப்படாமல் உள்ளன.

மலேசியஇலக்கியத்தைப் பொறுத்தவரையில் இவ்வளவு மோசமான நிலை இல்லை. ‘செலாஞ்சார் அம்பாட்’, ‘சயாம் மரண இரயில்’ உள்ளிட்ட வரலாற்றுச் சம்பவங்கள் மலேசிய இலக்கியவாதிகளின் முயற்சியில் இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அது கூட இல்லை.

அதேவேளையில், ஏராளமான விடைதெரியாத மர்மமான சம்பவங்களும் இன்னும் கதைகளாகவோ, திரைப்படங்களாகவோ உருவாக்கப்படாமல் உள்ளன. அதற்கு அரசாங்கத்தின் தணிக்கைக் கட்டுப்பாடும், படம் உருவாக்கத் தேவையான பட்ஜட்டும் ஒரு காரணமாக இருக்கலாம்.

kabali1உதாரணமாக, மாயமான எம்எச்370 விமானத்தைப் பற்றிய ஒரு படம், வேற்றுமொழியில் உருவாகி வருகின்றது. ஏன் அது இங்கு முதலில் உருவாகவில்லை? என்ற கேள்வி எழத்தானே செய்கின்றது.

எனவே, கபாலி வெற்றியைப் பார்த்த பிறகு, மலேசியாவிற்கு கதையைத் தேடி, இந்திய சினிமாவின் படையெடுப்புகள் அதிகமாக இருக்கலாம்.

அதேவேளையில், மலேசிய இந்தியர்களை மையமாகக் கொண்ட கதை, முன்னணி நடிகர்களைக் கொண்டு, தமிழ்த்திரைப்படமாக உருவானால் , உலகளவிலான தமிழ் சினிமா சந்தையில் கோடிக் கணக்கில் வியாபாரம் நடக்கும் என்பதை அறிந்து கொண்டுவிட்டால், மலேசியாவைச் சேர்ந்த மற்ற மொழி தயாரிப்பாளர்கள் கூட அப்படிப்பட்ட கதைகளைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க முன் வருவார்கள்.

அச்சூழ்நிலையில், மலேசியாவை மையப்படுத்திய கதையுடனும், முன்னணி நடிகர்களின் கால்சீட்டோடும் (அது கோலிவுட்டோ, பாலிவுட்டோ அது பிரச்சனை இல்லை) வரும் இயக்குநர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

மலேசியத் தமிழ் சினிமா

மலேசியாவில் மலாய், சீன மொழிப்படங்களுக்கு நடுவே மலேசியத் தமிழ் சினிமாவும் தொடர்ந்து தனது வெற்றிக் கொடியை நாட்டப் போராடி வருகின்றது.

ஆனால், வாரந்தோறும் அதிகமான தமிழக சினிமாக்களின் வரவாலும், திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், வியாபார ரீதியில் நஷ்டமடைகின்றன.

அதேவேளையில், மலேசியாவில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் ரசிகர்களை ஈர்ப்பதில் செய்யும் பொதுவான தவறுகள் என்றால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று.. மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையோடும், கலாச்சாரத்துடனும் பொருந்தாத கதையில், மலேசிய நடிகர்களை நடிக்க வைத்து திரைப்படமாக எடுப்பது. உதாரணமாக, தமிழக கலாச்சாரத்தோடு ஒத்துப் போகும் கதையை அப்படியே மலேசியாவில் எடுப்பது.

இரண்டு, மலேசிய இந்திய ரசிகர்களை ஈர்ப்பதில் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்குவது. இதனால் தகுதிக்கு மீறிய அதிக பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டாலும் கூட ரசிகர்களிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காமல் நஷ்டமடைகின்றது.

அப்படியே படம் நன்றாக இருந்தாலும் கூட, மக்கள் ஓரளவு அப்படத்தின் தரம் குறித்து அறிந்து திரயரங்கு வரும் வரை திரையரங்கு உரிமையாளர்கள் காத்திருப்பதில்லை.

Jagatஇவற்றில் ‘ஜகாட்’ போன்ற படங்களை விதிவிலக்காகக் கூறலாம். குறைந்த பட்ஜட்டில் ஒட்டுமொத்த மலேசியர்களின் வாழ்க்கைச் சூழல் அதில் பிரதிபலித்ததால் தான் மலேசியாவில் தமிழர்களையும் தாண்டி, மலாய், சீன மக்களால் அப்படம் கொண்டாடப்பட்டது. அதன் மூலம் மலாய், சீன ஊடகங்களின் பேராதரவும் கிடைத்தது.

ஊடகங்களைப் பொறுத்தவரையில், ஒரு படத்தை விளம்பரம் செய்வதால் காசு ஈட்ட முடியும் என்றாலோ அல்லது அப்படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து கணிசமான ஒரு நிதி வந்தாலோ தான் தொடர்ந்து அப்படத்தை விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையில் உள்ளது. அப்படி இருக்கும் போது, சிறிய பட்ஜட் படங்கள் விளம்பரத்திற்கென்று செலவு செய்யாத போது அவை மக்களிடம் சேர்வதில்லை.

இந்நிலையில், மலேசியத் தமிழ் சினிமா கபாலியை வெற்றிப்பாதையின் திறவுகோலாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

ஹாங்காங், தாய்வான் சினிமாத்துறை ஹாலிவுட்டின் வருகையால் எப்படி புத்துயிர் பெற்றதோ? அதேபோல் கபாலிக்குப் பின்னர் மலேசிய தமிழ் சினிமாத்துறை, தமிழக சினிமாத்துறையுடன் ஒரு இணக்கமான ஒரு நிலையை ஏற்படுத்தும் போது, புத்துயிர் பெற்று வியாபார ரீதியில் முன்னேற்றமடையும் வாய்ப்பு உள்ளது.

மலேசியக் கதையில் சூப்பர் ஸ்டாரே நடித்துவிட்ட பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்று கேட்கவா வேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று தாதாவான ஒருவரின் கதையான பாட்ஷாவின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, மும்பையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து எத்தனைப் படங்கள் வந்து வெற்றி பெற்றன என்பது தெரிந்த ஒன்று. இந்தத் தொடர்பின் மூலம் மும்பையிலிருந்து எத்தனையோ திறமையான கலைஞர்கள் தமிழ் சினிமாவில் இன்று வரைப் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, கபாலிக்குப் பிறகு மலேசியக் கதையைத் தேடி பெரிய பட்ஜட் படங்கள் வரும் பட்சத்தில், இங்குள்ள கலைஞர்கள் அவர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி, இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைத்திலும் முன்னணி வாய்ப்பினைப் பெறுவது தான்.

அதேவேளையில், இங்குள்ள வரலாற்றுச் சம்பவங்களை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப திரைக்கதை எழுதி வைத்துக் கொண்டால், அடுத்தடுத்து கதை தேடி வரும் முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இசைத்துறையைப் பொறுத்தவரையில் மலேசியாவைச் சேர்ந்த பல திறமையான ராப் கலைஞர்கள் இந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்களோடு பணியாற்றி வருவது போல், இங்குள்ள பல திறமையான இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்றலாம்.

அவ்வாறு பெரிய பட்ஜட் படங்களில் பணியாற்றும் போது, மலேசியக் கலைஞர்கள் உலகளவில் புகழ்பெறுவதோடு, அடுத்தடுத்து தனியாக உள்ளூரில் படம் பண்ணும் போது மலேசிய ரசிகர்களிடத்திலும் வரவேற்பு இருக்கும், தயாரிப்பாளர்களும் துணிவோடு படமெடுக்க முன்வருவார்கள்.

ஆகவே, கபாலியின் (சூப்பர் ஸ்டாரின்) வரவு மலேசியத் தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய நன்மையே.. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உலகத் தமிழ் சினிமாவில் மலேசியா அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வியாபார ரீதியில் அசைக்க முடியாத இடத்தையும், லாபத்தையும் ஈட்டும் வாய்ப்புள்ளது.

– ஃபீனிக்ஸ்தாசன்