சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் விசுவரூபம் எடுக்க –
இந்த முறை தமிழகத் தேர்தலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகும் மாற்று அணி என எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி இறுதி நேரத்தில் பின்னடைவைச் சந்தித்து அனைத்து கருத்துக் கணிப்புகளும் இப்போது 10 சதவீத வாக்குகள்தான் இவர்கள் பெறுவார்கள் எனக் கூறுவது ஏன்?
அண்மையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரசின் மூத்த – அனுபவம் மிக்க அரசியல்வாதியுமான ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் கூறினார் : “வலுவான கூட்டணி என்னும்போது, அதை முதலிடத்திலோ, இரண்டாவது இடத்திலோ இருக்கும் கட்சிகள்தான் அமைக்க முடியுமே தவிர மூன்றாவது பெரிய கட்சி எப்போதுமே வலுவான கூட்டணி அமைக்க முடியாது. அந்தவகையில் தமிழகத் தேர்தலில் அதிமுக அல்லது திமுக இரண்டில் ஒன்றுதான் வலுவான கூட்டணியை அமைக்க முடியும் என்பதுதான் அரசியல் நிதர்சனம். மூன்றாவது நிலையில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் அது வலுவாக இருக்காது”
இந்த அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணி ஏன் தேர்தல் நெருங்க நெருங்க பின்னடைவைச் சந்தித்தது என்பதற்கு பின்வரும் அம்சங்கள் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன:
- தொடங்கும்போது ஆறு கட்சிக்கூட்டணி வலுவாகத் தான் இருந்தது. மாமண்டூரில் அவர்கள் நடத்திய முதல் கூட்டம் தமிழகத்தையே அதிர வைத்தது. அன்றுதான் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்றாலும் அந்த பிரதான திமுக நிகழ்ச்சியை விட பிரமாதமாக இரசிக்கப்பட்டது மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தின் பிரம்மாண்டம்தான். கூட்டணி ஆட்சி என்பது கூட மக்களை வெகுவாகக் கவர்ந்தன.
- ஆனால் விஜயகாந்த் முதல்வர் என்பதில்தான் பிரச்சனைகள் உருவெடுக்கத் தொடங்கின.
- விஜயகாந்த் 10 சதவீத வாக்கு வங்கிக்குச் சொந்தக்காரர் என்பது மட்டும்தான் அவரது பலம். ஆனால், அவரே முதல்வர் வேட்பாளர் என்றதும் அவரது செயல்பாடுகள் விமர்சனத்துக்கும் மற்ற தலைவர்களுடனான ஒப்பீடுகளுக்கும் உள்ளாகத் தொடங்கியது.
- தனிமனித துதி பாடாத கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கின்றன என்ற கண்டனங்கள் அந்தக் கட்சிகளுக்குள்ளேயே எழுந்தன.
- திறமை வாய்ந்த வைகோ இருக்க, விஜய்காந்துக்கு முடிசூட்டப்பட்டது, வைகோவின் மதிமுக கட்சியினரிடையே சோர்வையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
- முதல்வர் வேட்பாளர் என்னும்போது, பிரதமர் வேட்பாளராக இருந்த நிலையில் மோடி என்னவெல்லாம் செய்தார் என்பதை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது தன்னால் ஒரு சிறந்த தலைவராக செயல்பட முடியும் என விஜய்காந்தால் காட்ட இயலவில்லை. அவரது குழறுபடியான, தெளிவில்லாத பேச்சு, பொது இடங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எல்லாம் மக்களை முகம் சுளிக்க வைத்தது. முதல்வர் வேட்பாளர் என்ற அவரது பிம்பத்தையும் உடைத்தது.
- அதற்கு விஜய்காந்தை விட 92 வயது கருணாநிதியே பரவாயில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும் வண்ணம் விஜய்காந்த் நடந்து கொண்டார்.
- வாக்களித்த பின்னர் அனைத்து தலைவர்களும் ஓரிரு வார்த்தைகள் பேச, எதுவுமே பத்திரிக்கையாளர்களிடம் பேசாமல் சென்ற விஜய்காந்தின் ‘அதிசய’ குணம், அவர் எவ்வாறு தனது தோற்றத்தைக் கட்டம் கட்டமாக சிதைத்துக் கொண்டு வருகின்றார் என்பதற்கான ஓர் உதாரணம்.
- இருந்தாலும், பேச்சாற்றல், செயலாற்றல் மிக்க வைகோ பின்னால் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார் பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் முதலில் மக்களிடையே ஏற்பட்டது. பின்னர் அவர்தான் துணை முதல்வர் என்றதும் மக்களிடையே ஒரு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதுமே சாதிப் பிரச்சனைகளால் தகிக்க, தனது தொகுதியில் மட்டும் அதைக் காரணம் காட்டி, வைகோ விலக, ஊசியால் குத்தப்பட்ட பலூன்போல மக்கள் நலக் கூட்டணி புஸ்வாணமாகியது.
- களத்தில் வைகோ இல்லாமல் போனது மக்கள் நலக் கூட்டணியின் பெரும் பின்னடைவுக்கான முக்கியக் காரணம். தொகுதியில் போட்டியிடுவேன் என முன்னரே அறிவிக்காமல், நாடு முழுக்க பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்பதைக் காரணம் காட்டி, வைகோ போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தால் அது வேறு விதமாகப் பார்க்கப்பட்டிருக்கும்.
- தமிழ் மாநிலக் காங்கிரசின் ஜி.கே.வாசன் இறுதி நேரத்தில் வந்து சேர்ந்தது எதிர்பார்த்த உற்சாகத்தையோ, விளைவுகளையோ ஏற்படுத்தவில்லை. கடை கடையாக ஏறி இறங்கி விட்டு, எதிர்பார்த்தது எங்கும் கிடைக்காமல், இறுதியில் இங்கு வந்து இணைந்திருக்கின்றார் என்ற விமர்சனம் மக்களிடையே எடுபட்டது.
- விஜய்காந்துக்குப் பதிலாக அவரது மனைவியும் மைத்துனர் சுதீஷும் முன்னிறுத்தப்பட்டது வாக்காளர்கள் மனங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இன்னொரு குடும்ப அரசியலாக இது பார்க்கப்பட்டதே தவிர மாற்று அரசியலாகப் பார்க்கப்படவில்லை.
- பிரேமலதாவின் ஆக்ரோஷமான, ஆவேசமான பிரச்சாரங்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு பலம்தான் என்றாலும், இன்னொரு கோணத்தில், குடும்ப அரசியலாக, இவர்களைத் தேர்ந்தெடுத்தால், இன்னொரு குடும்பம் வந்து அரியணையில் ஏறி ஆட்சி செய்யப் போகின்றது என்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது.
- இறுதி நேரத்தில் சந்திரகுமார் போன்றவர்கள் தேமுதிகவில் இருந்து வெளியேறி விஜய்காந்தை கடுமையாக சாடியதும், பிரேமலதா பிடியில் கட்சி இருக்கின்றது எனச் சாட்டிய குற்றச்சாட்டுகளும், தேமுதிக ஆதரவு மையத்தையும், தோற்றத்தையும் அசைத்துப் பார்த்தது. விஜய்காந்த் குடும்பத்தினருக்கு எதிரான சந்திரகுமாரின் விமர்சனங்கள் மக்களிடையே சில மனமாற்றங்களை ஏற்படுத்தின.
- வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும், தேர்தல் பணிகளில் அனுபவம் வாய்ந்த திமுக – அதிமுக கட்சிகள் அதிரடியாக இறங்கி களப்பணி ஆற்றத் தொடங்க – மக்கள் நலக் கூட்டணியின் அனுபவமில்லாத வேட்பாளர்கள் பின்தங்கத் தொடங்கினர்.
- குறிப்பாக, திமுக – அதிமுக கட்சிகளின் பணபலம், பண விநியோகம் மக்கள் நலக் கூட்டணியின் பின்னடைவுகளை கூடுதலாக்கியது.
- இறுதியாக, விஜய்காந்த் ஒரு சிறந்த முதல்வராகச் செயல்படுவார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியாததும், வைகோ போட்டியிடாமல் ஒதுங்கியதும்தான் பணபலம் என்பதைத் தவிர அரசியல் சித்தாந்த ரீதியாக தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி பின்னடைவு கண்டதற்கான முக்கியக் காரணங்கள்!
-இரா.முத்தரசன்
(செல்லியல் நிர்வாக ஆசிரியர்)