லண்டன் – எதிர்வரும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் தேசிய முன்னணி தோல்வியடைய வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறிவருவது “காரணமற்றது” என்ற போதிலும் “எதிர்பார்த்தது தான்” என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியில் இருந்தும், அம்னோவில் இருந்தும் எவ்வளவோ நன்மைகளைப் பெற்றுள்ள மகாதீர், இப்போது தேசிய முன்னணியை நிராகரிக்கும் படி மக்களிடம் கூறுகின்றார் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ பயணமாக 5 நாட்கள் லண்டன் சென்ற நஜிப் நேற்று அங்கு மலேசியச் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பாரிஷான் மற்றும் அம்னோவிலிருந்து அவர் எவ்வளவோ பெற்றுள்ளார். தேசிய முன்னணியும், கட்சியும் இல்லையென்றால், அவர் அமைச்சராகவும், 22 ஆண்டுகள் பிரதமராகவும் ஆகியிருக்க முடியாது. பிரதமர் பதவியின் மூலம் அவரும், அவரது குடும்பத்தினரும் பல நன்மைகளைப் பெற்றனர். அதற்குக் காரணம் தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் பலம் தான். இப்போது மக்களிடம் சென்று அவருக்கு நன்மை அளித்த கட்சியையே நிராகரிக்கச் சொல்கிறார்” என்று கூறியுள்ளார்.
வரும் ஜூன் 15-ம் தேதி நடக்கவுள்ள சுங்கை பெசார் மற்றும் கோல கங்சார் இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணியை வீழ்த்த கூட்டு முயற்சி தேவை என டாக்டர் மகாதீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.