Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

1283
0
SHARE
Ad

Theri-movie-posterகோலாலம்பூர் – ‘தெறி’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில் ஒரு பட்டாளமே நடித்து வெற்றியடைந்து, ரசிகர்கள் பார்த்துப் பழகி விட்ட ஒரு அதரபழசான போலீஸ் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கே தெரியும்.

படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அடுத்தடுத்து வரும் காட்சிகளையும், சம்பவங்களையும் ஒரு ரசிகனால் மிக எளிதில் கணித்துவிட முடியும். அந்த அளவிற்கு இந்தக் கதையும், திரைக்கதை வடிவமைப்பும் அதே பழைய பார்முலா தான்.

#TamilSchoolmychoice

சரி.. படம் எப்படி?

ரசித்தவை

1.விஜய் நடிப்பும், உடல்மொழியும் அருமை. படத்தில் அவரது கதாப்பாத்திரம் சமூகப் பொறுப்புள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட, எதற்கெடுத்தாலும் முஷ்டி முறுக்காமல் மிக இயல்பாக ஒரு சராசரி இளைஞனைப் போல் நடித்துள்ளார்.

theri-6அதிலும், குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் விஜயின் ஸ்டைலும், காமெடியும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் அந்த சண்டைக் காட்சியில் வரும் காமெடியும், போலீஸ் ஸ்டேசனில் நடிகர் காளி வெங்கட்டுடனான காமெடியும் நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவரும். ஒரு காட்சியில் நடிகர் தனுஷ் போல் ஆட்டம் போட்டு தியேட்டரில் விசில் பறக்க வைத்துவிட்டார் விஜய்.

2.விஜய்க்கு இணையாகப் படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகாவும், மொட்டை ராஜேந்திரனும் காமெடி செய்துள்ளனர். விஜய், நைனிகா, தந்தை, மகள் பாசம் நெகிழ்ச்சியடைய வைக்கின்றது. ‘தெறி பேபி’ வசனம் சூப்பர்.

3.மொட்டை ராஜேந்திரனுக்கு எப்போதும் விஜய் கூடவே வரும் கதாப்பாத்திரம். ஆனால் அவரது குரலுக்கு அவ்வளவு சீரியசான பெரிய பெரிய வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். பாவம் மனுஷன் பேசுறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு.. ஆனால் நடிப்பில் தெறிக்கவிடுகிறார்.

vj-878054.சமந்தா.. நல்ல கதாப்பாத்திரம், நன்றாக நடித்திருக்கிறார். மகிழ்ச்சி, கண்ணீர், சோகம், காதல், கவர்ச்சி என எல்லாம் வெளிப்படுத்த அவருக்கு படத்தில் நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதை சிறப்பாகச் செய்திருக்கின்றார். (என்றாலும், க்ளோசப் காட்சிகளில் அவரது முகத்தை ரசிக்க முடியவில்லை. உதடுகள் வீங்கி, தாடை தூக்கிக் கொண்டு ஏனோ வித்தியாசமாகத் தெரிகின்றார். ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் பார்த்த அந்தக் களையான முகம் இப்போது இல்லை.)

5.எமி ஜாக்சன் .. அழகாக இருக்கிறார். பாப் வெட்டிக் கொண்டு படம் முழுவதும் சேலையில் வருகிறார். தமிழுக்கு தத்ரூபமாக வாயசைத்துக் கொண்டிருந்தவர், இப்போது மலையாளத்திற்கும் முன்னேறியிருக்கிறார். (என்றாலும், படத்தில் நடிப்பதற்கு அவருக்கு ஒன்றுமே இல்லை. வாய்ப்பிருந்தும் அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகின்றது.)

6.இயக்குநர் மகேந்திரன்.. வில்லனாக தனது தனித்துவமான நடிப்பாலும், உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் மிரட்டுகின்றார்.

cbmp16mahendran_jp_1685383g7.”சாவை விடக் கொடுமையான ஒரு தண்டனை ஒனக்குக் கொடுக்கனும்டா”, “இதோ உன்னைத் தேடி வந்துக்கிட்டே இருக்கேன்”, “பாப்பா .. குளி நல்லா குளி” இப்படியாக அவரது வசனங்கள் மிரட்டல்.

8.கிளைமாக்ஸ் காட்சியில், நைனிகா அவரிடம் பேசுகையில், அவர் திருந்திவிடக் கூடாதா? என்று நமக்கே கூட தோன்றுகிறது. பழைய வில்லன் நடிகர் செந்தாமரையை மீண்டும் பார்த்தது போல் இருந்தது.

9. விஜய்க்கும், ராதிகாவிற்கும் இடையிலான தாய்-மகன் பாசமும் மிகவும் ரசிக்க வைத்தது. அதிலும் குறிப்பாக, தாயை பாப்பா என்று அழைப்பது இன்னும் இனிமையாக இருந்தது.

10. ஒரு கற்பழிப்பு சம்பவத்தின் கொடூரத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு நிச்சயமாக இயக்குநருக்குப் பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். அதேநேரத்தில், தந்தையின் வளர்ப்பு பற்றியும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

11. ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளீச் இரகம். சாலையில் கார் செல்லும் காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஆகியவை ரசிக்க வைக்கின்றன.

12.ஜி.வி.பிரகாஷ் இசையில், பாடல்கள் அருமை. “ஜித்து ஜில்லாடி’ விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும். “ஈனா மீனா டீக்க” பெண்களையும், குழந்தைகளையும் கவரும், “தெறி” பாடல் மாஸ், “தாய்மை” பாடல் நெகிழ்ச்சி. பின்னணி இசையைப் பொறுத்தவரையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதைப் போல் தெரிகின்றது.

ரசிக்க முடியாமல் போனது

1.இயக்குநர் அட்லீயின் முந்தைய திரைப்படமான ‘ராஜாராணி’ மௌனராகம் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டாலும் கூட, அதில் ஒரு புதுமை இருந்தது. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும், அதன் குணநலன்களும் பெரிதும் வித்தியாசப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருப்பது சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. படத்தின் சுவாரஸ்யமாக இயக்குநர் கருதியிருப்பவை யாவும் இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் வந்துவிட்ட காட்சிகளே.. ஏன்? விஜயே இதே மாதிரி பார்முலாவில் இதற்கு முன்பு சில படங்கள் நடித்திருக்கிறார்.

2. ‘வம்பு தும்பிற்கு போகமால் தனது மகளுடன் அமைதியாக வாழும் ஹீரோ’, ‘ஒரு பிளாஷ்பேக்’ ‘போலீஸ்அதிகாரி’, ‘தாய்பாசம்’, ‘காதல்’, ‘கடமை’, ‘ஒரு கற்பழிப்பு’  ‘மந்திரி மகன்’, ‘கொலை’ ‘பழிவாங்கல்’, ‘எதிரிகள் வதம்’ ‘சுபம்’ – இந்த வார்த்தைகளை (Key words) வைத்தே ஒரு தீவிர தமிழ் சினிமா ரசிகனால் முழுப்படத்தின் கதையையும் பெரும்பாலும் கணித்துவிட முடியும். அந்த அளவிற்கு கதை அவ்வளவு பரீட்சயம்.

 

samantha-theri-photos-043.டிசிபி விஜயகுமார் கதாப்பாத்திரம் லாஜிக்கே இல்லாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட கண்ணை மூடிக் கொண்டு சுடுவதும், கொலை செய்வதும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதும், மந்திரியை மிரட்டுவதும், தமிழ்நாட்டில் நடக்கும் கதை என்பதை நம்ப முடியவில்லை. பக்கா ஹீரோயிசம்..

4. வில்லன் அமைச்சராம்.. படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் அமைச்சர் என்பதற்கான அடையாளமே இல்லை. போலீஸ் அதிகாரி பிரபுவை தனது வீட்டுற்கு அவ்வப்போது கூப்பிட்டு வேலையாள் மாதிரி ஏவிக் கொண்டே இருக்கிறார் அவ்வளவு தான்.

5. இது எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம், துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட சுருண்டு விழுகின்றது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து திடீரென எழுந்து சென்று மற்றொரு கதாப்பாத்திரத்தைக் காப்பாற்றுகின்றது. பின்னர் ஹீரோவிடம் செண்டிமெண்டாகப் பேசி, அறிவுரையெல்லாம் கூறிவிட்டு சாவகாசமாக கண்ணை மூடுகின்றது. தினம் ஒரு கொலையை பேஸ்புக்கில் வீடியோ மூலமாகப் பார்க்கும் இந்த 2016-ல் கூட இன்னும் அந்த 1980 காலக்கட்ட சினிமா பாணியை விடவில்லயா? துப்பாக்கியால் சுட்டால் என்ன ஆகும் என்று இப்போதுள்ள ரசிகனுக்குத் தெரியாதா? (சரி.. சினிமாவில் அதெல்லாம் பார்க்க முடியுமா? என்றால் ஏற்றுக்கொள்ளலாம்)

vijay-and-amy-jackson-new-wallpapers-10888இப்படியாக, படத்தின் கதையிலும், காட்சியமைப்புகளிலும் புதுமை எதுவும் இன்றி விஜயின் ஸ்டைலையும், இயக்குநர் மகேந்திரனின் வில்லத்தனத்தையும் மட்டுமே ரசித்துவிட்டு வர முடிகின்றது.

மொத்தத்தில், ‘தெறி’ – தெரிந்த போலீஸ் கதை.. படம் முழுவதும் விஜய் தனது பங்கை சிறப்பாகச் செய்திருப்பதால் அவரது ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் ஆபாச வசனமோ, காட்சிகளோ இல்லாததால் நிச்சயமாக குடும்பத்தோடு சென்று படம் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு நைனிகாவைப் பிடிக்கும். மகள்கள் இனி தந்தையை ‘பேபி’ என்று அழைப்பது இந்தப் படத்தின் மூலம் ட்ரண்ட் ஆகும்.

இருப்பினும், ‘துப்பாக்கி’ படம் போன்ற விறுவிறுப்பான காட்சிகளையும், போலீஸ் கதையில் கணிக்க முடியாத திருப்பங்களையும், வித்தியாசமான திரைக்கதை அமைப்பையும் எதிர்பார்க்கும் ரசிகர்களை இந்தப் படம் ஈர்ப்பது சந்தேகமே..

– ஃபீனிக்ஸ்தாசன்