மதுரை – அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தை நேற்று மதுரையில் இருந்து தொடங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அப்போது அவர் கூறியதாவது; ‘அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது. கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கி, பின்தங்கிய, துயரமான சூழ்நிலையில் இருந்து வருகிறது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய முட்டைகளில் ஊழல் செய்யத் தொடங்கி, மின்சாரத்தைக் கொள்முதல் செய்தது வரை எல்லாவற்றிலும் ஒரேயடியாக ஊழலை மட்டும் செய்து பொதுமக்களின் வாழ்வை ஜெயலலிதா முழுமையாக சீரழித்து விட்டார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.
உதாரணமாக, கடந்த தேர்தலின் போது மதுரை மக்களிடம், “தமிழ் தாய் சிலை அமைக்கப்படும், மெட்ரோ ரயில் வசதி உருவாக்கப்படும், எயிம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும்”, என்றெல்லாம் கவர்ச்சிகரமாக தெரிவித்த வாக்குறுதிகள் ஒன்று கூட இன்றுவரை மதுரையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
தமிழகத்தில் புதிய விடியலை உருவாக்க முன் வர வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன் முடியட்டும் தேர்தல் விடியட்டும் தமிழகம் என ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.