சேலம் – சேலம் மாவட்டத்தில் நேற்று, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது கனிமொழி பேசியதாவது: கடந்த 2006-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுத்து, விவசாயிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை ரத்து செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து காப்பாற்ற கூடியவர் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான். திமுக தேர்தல் அறிக்கையில், மக்களின் கருத்துகள் தான் இடம் பெற்றுள்ளது. இது தமிழக மக்களின் தேர்தல் அறிக்கை.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா, தற்போது தேர்தலின் போது மட்டும் மக்களை சந்தித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக, மதியம் 1 மணிக்கு பொதுமக்களை அழைத்து வந்து வெயிலில் காக்க வைக்கிறார். இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மயக்கம் அடைந்தனர்.
இவர் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார்?. செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்டார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் எதையும் செய்யவில்லை. சட்டமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்தார். அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என கனிமொழி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தொகுதி மக்களுக்கு பணிகளை செய்ததால் கருணாநிதி திருவாரூரிலும், ஸ்டாலின் கொளத்தூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஆனால் மக்களுக்கு பணி எதுவும் செய்யாததால், தோல்வி பயத்தால் தொகுதி மாறி விஜயகாந்த் போட்டியிடுகிறார்’’ என்றார்.