மும்பை – விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணை (பிடிவாரண்ட்) விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் இருந்து ரூ.950 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லைய்யா மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், விசாரணைக்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், மல்லைய்யா ஆஜராகாமல் தலைமறைவானார். மாநிலங்களவை உறுப்பினரான விஜய் மல்லைய்யா, தனது சிறப்பு பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்து சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவின் பரிந்துரையை ஏற்று, விஜய் மல்லைய்யாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில், விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைதுஆணை உத்தரவை பிறப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத ஆணையை பிறப்பித்து உத்தரவிட்டது. கடந்த வாரம் அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் கூறும்போது, ஐடிபிஐ வங்கியிலிருந்து கிங்பிஷர் பெற்ற ரூ.950 கோடி கடன் தொகையில் ரூ.430 கோடியை வெளிநாட்டில் சொத்து வாங்கியிருப்பதாக கடும் குற்றம்சாட்டியிருந்தது.
ஆனால், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை எதிர்த்து கிங்பிஷர் நிறுவனம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தது. அதில், விஜய் மல்லைய்யா கடனாக பெற்ற பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்யவில்லை என்றும், வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பான முழு தகவல்களை சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.