லாஸ் ஏஞ்சல்ஸ் – முன்னாள் மல்யுத்த (WWE) வீராங்கனையும், அமெரிக்க தொலைக்காட்சிப் பிரபலமுமான சைனா (வயது 45) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அவரது வீட்டில் இன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
ஜோனி லாவ்ரெர் என்ற இயற்பெயரைக் கொண்ட சைனாவின் இறப்பிற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையில், புதன்கிழமை மாலை (மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை), ரெடோண்டோ பீச் ஹவுஸ் என்ற அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தற்போது அவரது திடீர் இறப்பிற்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகின்றது.
1999-களில் மல்யுத்தத்தில் மிகப் பிரபலமாக வலம் வந்தவர் சைனா. எப்போதும் ட்ரிபில் எச்(Triple H) உடன் கூட்டணி அமைத்து மல்யுத்த களத்தில் இறங்குவார். விறுவிறுப்பான கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை படைத்தவராக விளங்கினார் சைனா.
பேஸ்புக், யூடியூப் போன்ற நவீன வசதிகள் இல்லாத அன்றைய காலக்கட்டத்தில், ஸ்டார் டிவி உள்ளிட்ட விளையாட்டு அலைவரிசைகளில் வாரந்தோறும் ஒரு சில மணி நேரங்கள் மல்யுத்தப் போட்டிகள் ஒளிபரப்பாகும்.
அவற்றில் ஆண்களுக்கு நிகராக கட்டுமஸ்தான உடலமைப்பும், கவர்ச்சியும் கொண்டிருக்கும் சைனா, மல்யுத்தக் களத்தில் இறங்கி ஆடும் ஆட்டத்தைக் காண உலகம் முழுவதும் இளைஞர்கள் பட்டாளம் காத்திருக்கும்.
அப்படி மல்யுத்த சாம்பியனாக வலம் வந்தவர், பின்னர் ‘ப்ளேபாய்’ உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபல இதழ்களின் கவர்ச்சி அட்டைப்படங்களில் இடம்பிடித்தார்.
அதன் பின்னர் 2005 வாக்கில், தொலைக்காட்சி உண்மை நிகழ்ச்சிகளிலும் தலை காட்டத் துவங்கினார்.
அதனையடுத்து, ஆபாசப் பட நிறுவனங்கள் அவரது கவர்ச்சிக்கு அதிக விலை கொடுக்க முன்வந்தன. அதையும் ஏற்றுக் கொண்டு 2013-ம் ஆண்டு வரையில் 6 ஆபாசப் படங்களில் நடித்தார்.
பின்னர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார்.
இதனிடையே, 2008-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தலைகாட்டியிருந்த சைனா, தான் ஒரு விசயத்தில் அடிமையாகி அவதிப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் எதில் அடிமையாக இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடி வரும் சைனா, அவ்வப்போது, உடற்பயிற்சி பற்றிய ஆலோசனைகள், தான் நடித்த படங்களின் காட்சிகள் போன்றவற்றின் காணொளிகளை வெளியிட்டு வந்தார்.
கடைசியாக கடந்த வாரம் அவர் வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில் அவர் மிகவும் சோர்ந்தும், விரக்தியாகவும் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.