Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: வெற்றிவேல் – சசிகுமாரின் வழக்கமான கிராமத்துப் பாணி – சற்று வித்தியாசமான கோணத்தில்!

திரைவிமர்சனம்: வெற்றிவேல் – சசிகுமாரின் வழக்கமான கிராமத்துப் பாணி – சற்று வித்தியாசமான கோணத்தில்!

783
0
SHARE
Ad

Vetrivel-first-look-slide-600x378

கோலாலம்பூர் – காதலுக்காக ‘பொண்ணைத் தூக்கும்’ தனது வழக்கமான பாணிக்கே மீண்டும் திரும்பியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.

என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்த முறை நண்பரின் காதலுக்காகவோ, பழகத்திற்காகவோ செய்யாமல், உடன்பிறந்த தம்பியின் காதலுக்கு உதவியிருக்கிறார் நம்ம கிராமத்து ஹீரோ.

#TamilSchoolmychoice

பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டையில்’ வேறு மாதிரியான சசிகுமாராகத் தெரிந்தவர், ‘வெற்றிவேல்’ மூலமாக தனது பழைய பாணிக்கே திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையே தந்திருக்கிறது.

கதைச் சுருக்கம்

கிராமத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளவரசு, ரேணுகாவின் இரு மகன்கள் சசிகுமார், ஆனந்த் நாக். மூத்த மகனான சசிக்குமார் வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக எப்போதும் அப்பா இளவரசுவிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார். படித்து ஆசிரியராக வேண்டும் என்ற அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அந்த கிராமத்திலேயே உரக்கடை வைக்கிறார். தற்செயலாக மியா ஜார்ஜை சந்திக்கும் அவர் காதலில் விழுகின்றார்.

NTLRG_160421102520000000இது ஒரு புறம் இருக்க, பக்கத்து ஊர் தலைவர் பிரபுக்கும், அவரது தங்கை விஜிக்கும் இடையே பரம்பரைப் பகை இருந்து வருகின்றது. இந்நிலையில், பிரபுவின் மகளான வருஷாவைக் காதலிக்கிறார் சசிகுமாரின் தம்பி ஆனந்த். தம்பியின் காதலை அறிந்து, முதலில் அப்பா இளவரசு மூலமாக பெண் கேட்க வைக்கின்றார். ஆனால் பிரபு தனது சாதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் பெண் கொடுப்பேன் என்று கூறிவிட, பின்னர் ‘நாடோடிகள்’ உதவியோடு பெண்ணைத் தூக்குகிறார்.

ஆனால் அங்கு வேறு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் சசி. இதனால் அவர் தனது சொந்தக் காதலை இழக்க நேரிடுகிறது.

சசிகுமாரின் வாழ்க்கை என்ன ஆனது? ஆனந்த் வருஷாவின் காதல் சேர்ந்ததா? பிரபுவின் அவசர முடிவால் ஏற்படும் விளைவுகள்? விஜியின் பகையால் ஏற்படும் விபரீதங்கள் ஆகியவற்றை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாகச் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குநர் வசந்தமணி.

ரசித்தவை

சசிக்குமாரின் ‘வெற்றி’ கதாப்பாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கின்றது. அப்பா தன்னை எப்போதும் மட்டப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தாலும் கூட அவரை மரியாதையோடு பார்ப்பதும், அம்மாவிடம் பாசம் காட்டுவதும், தம்பியை ஒரு நண்பனைப் போல் நடத்துவதுமாக மிக இயல்பாக அமைந்திருக்கின்றது. அதற்கு ஏற்ப சசிக்குமாரும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“ஏன் நானும் வாத்தியார் தான்.. அவரு அறிவு கொடுத்து பசங்க வளர்க்குறாரு.. நான் உரத்தைக் கொடுத்து பயிர வளர்க்குறேன்” என்று சாமர்த்தியமாக அப்பாவை மடக்குவது, “அப்பா செத்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள அந்தப் புள்ளைய அங்க (திருமண வரவேற்பு) நிக்கச் சொன்னதே பாவம், இது வேறையா? (முதலிரவு)” என்று தனது மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு தம்பியைக் கடிந்து கொள்வது என பல காட்சிகளில் நெகிழ வைக்கிறார் சசிக்குமார்.

22-1461299210-vetrivel-s-s-600அப்பா கதாப்பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துபவர் நடிகர் இளவரசு.. அந்தக் கூற்றை மீண்டும் ஒரு முறை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். பிரபுவிடம் சென்று தனது மகனுக்காக பெண் கேட்பதும், அவர் இல்லை என்று சொன்ன பின்பும் கூட அவருடன் நட்புறவாடுவதுமாக அவரது கதாப்பாத்திரமும், நடிப்பும் மிகவும் அருமை.

ஊர் தலைவராக பிரபு.. மிடுக்கான தோற்றமும், அமைதியான பேச்சுமாக மனிதர் கலக்கியிருக்கிறார். கோபத்தை வேலையாளிடம் காட்டிவிட்டு, இளவரசுவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதும், பின்னர் செய்த தவறை உணர்ந்து இளவரசுவிடம் கெஞ்சுவதுமாக மிகவும் ரசிக்க வைக்கும் கதாப்பாத்திரம்.

அவருக்கு இணையாக வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் விஜி. கண்களால் உருட்டி மிரட்டுவதும், முகத்தில் பகையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதுமாக சிறப்பான நடிப்பு.

இதனிடையே, பெண்ணைத் தூக்க ‘நாடோடிகளாக’ சமுத்திரக்கனி குழுவின் வருகை ரசிகர்களுக்கு திடீர் மகிழ்ச்சியை அளிக்கின்றது. “நாங்க இருக்குற வரைக்கும் காதல் சாகாது சார்” என்ற வசனம் இனி நட்பு ஊடகங்களில் மீம்ஸ்களாகப் பரவப் போகிறது. அந்த அளவிற்கு ஒரு எதிர்பாராத திருப்பம். சசிக்குமாரின் திருமண வரவேற்பின் போது சமுத்திரக்கனி குழு தலைகுனிந்த நிலையில் வாழ்த்துவது சிரிப்பின் உச்சம்.

மியா ஜார்ஜ், நிகிலா, வருஷா மூன்று பேரின் நடிப்பும், பொலிவான தோற்றமும் அழகு. கேரளப் பெண்ணாக மியா ஜார்ஜ் தமிழையும், மலையாளத்தையும் கலந்து பேசுவது ஈர்க்கின்றது.

கதிர் ஒளிப்பதிவில் கிராமப்புறமும், காட்சிகளும் மிகவும் எதார்த்தமாகப் பதிவாகியுள்ளது. கதை நடக்கும் சூழலுக்கு காட்சிகள் மிகச் சரியாகப் பொருந்துகின்றன.

டி.இமான் பின்னணி இசை புதுமையாக இல்லை என்றாலும், காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கின்றது. பாடல்களில் ‘உன்ன போல’ மட்டும் மனதில் நிற்கும் ரகம்.

சொதப்பல்கள்

ஹீரோ அறிமுகப் பாடல் வைக்க வேண்டுமே என்பதற்காக கடமைக்கு ஒரு பாடல் வைத்திருப்பது போல் இருந்தது. அந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. அதில் சசிக்குமாரின் ஆட்டமும் ரசிக்க முடியவில்லை.

சசிக்குமார் – மியா ஜார்ஜ் காதல் காட்சிகள் உப்பு சப்பில்லாமல் மெல்ல நகர்கின்றது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருக்கலாம். தொய்வாக நகரும் அந்தக் காட்சிகளுக்கு பின்னணி இசையும் ஒரு காரணம்.

vetrivel_712016_mதம்பி இராமையாவை வைத்து வேறு விதமான கோணத்தில் காமெடிக் காட்சிகளை நகர்த்தியிருக்கலாம். பொண்டாட்டியை கள்ளக் காதலர்களிடமிருந்து காப்பாற்றப் போராடுவதும், “நாலு வருஷமா ஒன்னுமே பண்ணல” என்று அடிக்கடி தனது இயலாமையை வெளிப்படுத்துவதுமாக காமெடிக் காட்சிகள் இழுவை.

ரேணுகாவின் நடிப்பை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர் பேசும் கிராமத்து பாஷை மிகவும் செயற்கையாகத் தெரிகின்றது. அக்கதாப்பாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தால், அம்மா கதாப்பாத்திரம் ரசிக்கும் படியாக இருந்திருக்கும்.

மற்றபடி, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குடும்பத்தோடு திரையரங்கு சென்று ரசித்துவிட்டு வரும் படியாக ஒரு கிராமத்து மணம் வீசும் படமாக ‘வெற்றிவேல்’ அமைந்திருக்கின்றது.

அடுத்த வாரம் வரிசைக்கட்டிக் காத்திருக்கும் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு மத்தியில் இந்த வாரம், ஒரு அழகான குடும்பப்பாங்கான கிராமத்து கதையை ரசிக்க ஒரு வாய்ப்பு.

– ஃபீனிக்ஸ்தாசன்