கோலாலம்பூர் – “நவீன மின்-ஊடகங்களும், பாரம்பரிய அச்சு ஊடகங்களும்” என்ற சுவையான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று, நாளை பிற்பகல் 1.00 மணிக்கு, ஆர்டிஎம் தொலைக்காட்சி 2வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும் ‘வசந்தம்’ நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது.
பாரம்பரிய அச்சு ஊடகங்களின் சிறப்புகள், அதைத் தொடர்ந்து நவீன மின் ஊடகங்களின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள், மாறி வரும் தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தில் இவற்றின் பயன்பாடும், தாக்கங்களும் எவ்வாறு இருக்கும் என்பது போன்ற சுவையான, சுவாரசியமான விவாதங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், நவீன ஊடகங்களின் சார்பில் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன், பாரம்பரிய அச்சு ஊடகங்கள் சார்பில், ‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர் ஆகியோர் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் பாண்டித்துரை நெறியாளராக இருந்து வழி நடத்துவார்.
இந்த கலந்துரையாடலில், எதிர்வரும் மே 1ஆம் தேதி காஜாங் பிரெஸ்கோட் தங்கும் விடுதியில் நடைபெறவிருக்கும் ‘தென்றல்’ வார இதழின் வருடாந்திர வாசகர் விழா குறித்த தகவல்களையும் தென்றல் ஆசிரியர் வித்யாசாகர் பகிர்ந்து கொள்வார்.