கோத்தா கினபாலு – ஒரே நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாது என அந்த நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரை-நாடாளுமன்ற உறுப்பினரை – தடுத்து நிறுத்தி, அந்தக் குடிமகனைத் திருப்பி அனுப்பும் அவலம், இந்த நவீன யுகத்தில் நமது மலேசியாவில் மட்டும்தான் நடக்கும் போலும்.
மேற்கு மலேசிய அரசியல்வாதிகளில் பலருக்கு சரவாக் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி தரமுடியாது என அவர்கள் திருப்பி அனுப்பப்படும் வேளையில், நேற்று மாலை சபா மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலு வந்தடைந்த பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளருமான ரபிசி ரம்லிக்கும் அதே நிலைமை ஏற்பட்டது.
நேற்று மாலை விமானத்தின் மூலம் கோத்தா கினபாலு வந்தடைந்த அவருக்கு சபா முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு அவர் மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
சரவாக் மாநிலத்தைத் தொடர்ந்து இப்போது சபாவும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
இதுவரை மேற்கு மலேசியாவைச் சேர்ந்த சுமார் 20 எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், சமூகப் போராட்டவாதிகளும், சபா, சரவாக் மாநிலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.