புதுடெல்லி – வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பயணக்கடப்பிதழை (பாஸ்போர்ட்டை) முடக்கி உத்தரவிட்டது.
அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லைய்யாவின் பயணக்கடப்பிதழை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தனது டுவிட்டரில் விஜய் மல்லைய்யா சமர்ப்பித்த பதில்கள், அமலாக்கத் துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்கள், மற்றும் ஜாமீனற்ற கைது ஆணை ஆகியவற்றைப் பரிசீலித்து பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (3), (சி) மற்றும் 19 (3) (எச்) ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் மல்லைய்யாவின் முடக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விஜய் மல்லைய்யாவை நீதிக்கு முன் நிறுத்த அரசு திடமாக உள்ளது. தற்போது அவரை இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்களை தான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் மல்லைய்யா திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அமலாக்கத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றவர்தான் தொழில் அதிபர் விஜய்மல்லையா. தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். இவர் தெரிவித்த சமரச திட்டத்தை வங்கிகள் ஏற்க மறுத்துவிட்டன. இதையடுத்து அவரை நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.