சென்னை – புதுச்சேரியில் இன்று நடைபெறும் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா 30 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தல் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் களம் காண்கிறது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினரும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்கள்-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் புதுவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள பழைய துறைமுக மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் ஜெயலலிதா, இன்று 12.45 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன் பிறகு, உப்பளம் துறைமுக மைதானத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வருவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுகம் மைதானத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் சிறப்பு போலீஸ் படையினர் வந்து விழா நடைபெறும் மேடை, இடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் வெடிகுண்டு, நிபுணர்களும் விழா நடைபெறும் இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதிமுக பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும் போலீஸார் அறிவித்துள்ளனர்.