
புதுச்சேரி : புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
அதிபர் திரவுபதி முர்மு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதனை நியமனம் செய்துள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவராவார். தமிழகத்தின் ஊட்டியில் வளர்ந்தவர். இவரது தந்தை தபால் துறையில் பணியாற்றியவர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த கைலாசநாதன் 1979 ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குஜராத்தின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த இவர் 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும், தலைமை முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்ட மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதியில் தான் இந்த பொறுப்பில் இருந்து கைலாசநாதன் ஒய்வு பெற்றார். தற்போது புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார்.
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.