கோலாலம்பூர் – திரெங்கானு மாநிலத்திற்கு புதிய மந்திரி பெசாரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடப்பு மந்திரி பெசாரான அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாரை அமர்த்துவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், திரெங்கானு சுல்தான் மிசான் சைனல் அபிடினை சந்தித்த பிறகு அம்முடிவு அறிவிக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அதேவேளையில், தெலெமோங் சட்டமன்ற உறுப்பினர் ரோசி மாமட்டை மந்திரி பெசார் பதவியில் அமர்த்த திரெங்கானு அரண்மனை விரும்புவதாகவும், ஆனால் அம்மாநில அம்னோ உறுப்பினர்களோ பெர்மாய்சூரி சட்டமன்ற உறுப்பினர் மொகமட் ஜிடினை மந்திரி பெசார் பதவிக்கு முன்மொழிவதாகவும் சில முன்னணி செய்தி இணைதளங்களும் கூறுகின்றன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, திரெங்கானு சுல்தானை அவமதிப்பது போல் நடந்து கொண்டதால், திரெங்கானுவின் நடப்பு மந்திரி பெசார் அகமட் ராசிஃப்பின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் அவரை அழைக்கும் போது, அவரது ‘டத்தோஸ்ரீ’ பட்டம் குறிப்பிடாமல் அழைக்கப்பட்ட போது தான், இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், விரைவில் பிரதமர் நஜிப், சுல்தானைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.