ஈப்போ – ஈப்போவில் சிலைகள் உடைக்கப்பட்ட ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோவில் ஆலயத்தை பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி நேற்று பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிலைகளை உடைத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வகைப்படுத்திவிட்டு, அசட்டையாக இருந்து விடாமல், எதற்காக அந்நபர் அப்படி ஒரு காரியத்தை செய்தார் என்பதை காவல்துறைத் தீர விசாரணை செய்ய வேண்டும் என்று இராமசாமி தெரிவித்துள்ளார்.
அவரது செயலில் இனவாதத்திற்கான ஆதாரங்கள் இருப்பதால், இந்த விவகாரத்தில் காவல்துறை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று இராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்நபர் ஒரு மனநோயாளியாக இருந்திருந்தால், யாரையாவது தாக்கியிருப்பார். ஆனால் இங்கே, குறிப்பாக இந்து ஆலயத்தை மட்டுமல்லவா தாக்கியிருக்கிறார். அந்நபர் அச்செயலைச் செய்யும் முன்பு “அல்லாஹுஅக்பர்” என்று கத்தியதாக ஆலய நிர்வாகிகள் என்னிடம் கூறினர்” என்று எப்எம்டி இணையதளத்திடம் இராமசாமி கூறியுள்ளார்.
எனவே, காவல்துறை எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படையாக விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.