வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றியை தடுக்க அவரை எதிர்த்து போட்டியிடும் டெட் குரூஸ், ஜெயின் காசிக் ஆகியோர் கூட்டணி அமைத்து இருந்தனர். இருந்தும் நேற்று தேர்தல் நடந்த 5 மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் வேட்பாளர் தேர்வில் பெற வேண்டிய 1237 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை நெருங்கி விட்டார். எனவே, குயடிரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் தான் என அறிவித்து கொண்டார்.
நேற்று 5 மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 4 மாகாணங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ரோத் ஐலேண்டில் மட்டும் வென்றார். இதன் மூலம் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.