அலிப்போ (சிரியா) – சிரியா நாட்டின் வட பகுதியிலுள்ள அலிப்போ என்ற ஊரைக் கைப்பற்றுவதில் மோசமான கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டுப் போரில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 60 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுகள் முறிவடைந்துள்ள நிலையில், சிரியாவில் இதுவரை நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
அலிப்போவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவில் இயங்கும் ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அலிப்போ தற்போது தீவிரவாத எதிர்ப்புக் குழுக்களின் கைப்பிடியில் இருந்து வருவதாகவும் அதனை மீட்கும் போராட்டம் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் வரையிலான எண்ணிக்கை கொண்ட வெடிகுண்டுகளும் கையெறி குண்டுகளும் அரசாங்கக் கட்டிடங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களில் 14 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பாதிப் பேர் அலிப்போ பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.