Home Featured நாடு “தென்றல்” வரும் தருணமிது! – ‘ஜாசின்’ ஏ.தேவராஜன்

“தென்றல்” வரும் தருணமிது! – ‘ஜாசின்’ ஏ.தேவராஜன்

767
0
SHARE
Ad

(நாளை மே 1ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை காஜாங் பிரெஸ்கோட் தங்கும் விடுதியில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் ‘தென்றல்’ வார இதழின் வாசகர் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மலாக்கா ஜாசின் நகரைச் சேர்ந்த வாசகர் ஏ.தேவராஜன் வரைந்துள்ள கட்டுரை இது)

இந்த முறை நமது ‘தென்றல்’ ஆண்டு விழா தலைநகரைத் தாண்டி காஜாங் பிரெஸ்கோட் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. காஜாங் சி.தென்னரசு மற்றும் அவர்தம் செயலவையினரின் இயங்குமுறையை நாடே அறியும் .

ஏற்கெனவே, முதுகுவலிக்கு மத்தியில் எத்தனையோ தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எவ்விதப் பிரதிபலனுமின்றி நடத்திய பட்டறிவு நிரம்பியவர். கச்சிதமான அரங்கில் ஏற்பாடு செய்யப்படும்  அவரது  நிகழ்ச்சிகள் யாவும் இதுகாறும் சோடை போனது கிடையாது. எல்லா நிகழ்ச்சிகளும் கிட்டத்தட்ட ஒரு ‘குட்டி ஆண்டு விழா’வைப்போலவே காட்சி தரும். முறையான மின்னியல் கருவிகளும், கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலும், பங்கேற்பாளரின் ஈடுபாடும், செயலவையினரின் தன்னலமற்ற உழைப்பும், தென்னரசுவின் எழுத்தாளர் வாசகர் இயக்கம் என்றுமே சமுதாயப்பணிக்குச் சளைத்ததல்ல என்பதை உறுதிபடுத்தும்.

#TamilSchoolmychoice

Thenral-vasagar thiruvishaஇதே போன்றதொரு ஏற்பாட்டில் முன்பு பெயர் பதித்தவர் தாப்பா ‘வீரமங்கை’ மு.ஈ.ரமேஸ்வரி. பயங்கரமான ஏற்பாடு என்று சொல்வார்களே, அந்தப் பிரமாண்டம் மு.ஈ.ரமேஸ்வரிக்கு மட்டுமே போய்ச் சேரும். தமிழ் உணர்வு பொங்கிப் பிரவாகமெடுக்கும் நிகழ்ச்சிக்கு மு.ஈ.ரமேஸ்வரியே பொருத்தமானவர். கிள்ளான் செல்வமும் விதிவிலக்கல்ல. எனினும், அவரிடமிருந்து இன்னும் மேலான ‘தென்றல்’ விழாக்களை எதிர்பார்க்கிறோம். பூச்சோங் ஜி.குணசேகரன் அவர்களின் இலக்கிய நிகழ்ச்சிகளின் தரம் குறித்து பெரிய எழுத்தாளர்களின் பங்களிப்பு மனநிறைவு அளிப்பதாக உள்ளது. ஆனாலும், ‘தென்றலு’க்கு ஜி.கே அவர்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது.’ஷா ஆலம்’ துரை.முனியாண்டியின் ஏற்பாடும் அரங்கம் நிறைந்த கூட்டமும் இன்னும் கண்களில் உள்ளன. அவர்தம் மனைவி மிதுனரிஷி மற்றும் குழந்தைகளின் பங்களிப்பும் இவ்விடத்தில் நினைவுகூர்ந்தாக வேண்டும். வாழ்த்தைச் சொல்லிக்கொள்வோமாக!

அடுத்து நாட்டின் தென்கோடியிலிருந்து இடையறாமல் எழுதிவரும் பெரியவர் ‘அக்கினிக்குஞ்சு’ அ.வீர.இராமன் அவர்களின் எழுத்து மட்டுமல்ல, தாம் ஏற்பாடு செய்கின்ற தமிழ் நிகழ்ச்சிகளில் தனித்துவமான வெளிப்பாடும் புலப்படும். அண்மையில் சிம்பாங் ரெங்கம் சிற்றூரில் சகோதரர் வாணிதாசன் அவர்களோடு கைகோர்த்து இவ்வாண்டின் மிகச் சிறந்த ‘தென்றல்’ நிகழ்ச்சியைப் படைத்து, அனைவரையும் நிமிர்ந்து பார்க்கச்செய்தார். மிகவும் அற்புதமாகச் செயலாற்றிய வாணிதாசன் அவர்களின் இயக்கத்திற்கு மலேசிய தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தங்காக் பட்டணத்தில் உள்ளூர்த் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் கவியரங்கம் பாடும் நாட்டின் முதல் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிச் சாதித்தார் ‘தங்காக்’ ந.தமிழ்ச்செல்வி. முழுக்க முழுக்க தமிழாசிரியர்களே பங்குகொண்ட கவியரங்கமான அதுவே, வரலாற்றில் முதலும் கடைசியுமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்குச் சிறப்பாகத் தொகுத்திருந்தார் ந.தமிழ்ச்செல்வி. இதில் தமிழ்ச்செல்வியோடு அவர்தம் குழந்தைகள் ஓவியா, இலக்கியாவும் பங்குபெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thenral-magazine coverஅண்மைய ‘தென்றல்’ வார இதழின் முகப்பு படம்

இவற்றிற்கெல்லாம் மேலாக நமது ‘தென்றல்’ இதழ், வாசகர்களைத் தாண்டி கலைஞர்களுக்கும் பெருமளவில் போய்ச் சேர வேண்டும் எனும் நன்னோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் ‘கலைஞர்களுடன் தென்றல்’ எனும் நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 கலைஞர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். மலேசியாவிலேயே அதிகமான கலைஞர்கள் குழுமியிருக்கும் இடமாக கிள்ளான் வட்டாரத்தையே குறிப்பிட வேண்டும். அவர்களது சந்திப்பும் நமது ‘தென்றல்’ இதழில் வாரந்தோறும் மலர்ந்து வருவதை வாசகர்கள் அறிவர். இதன் விளைவாகக் கணிசமான கலைஞர்களின் மத்தியில் ‘தென்றல்’ தனியிடம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ‘தென்றலை’ வாங்கிவிட்டு நம்மிடம் தொடர்புகொண்டு புலனக்கலைஞர்களுடன் தகவலைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். தமிழ் எழுதத் தெரியாத கலைஞர்களின் மத்தியிலும் ‘தென்றல்’ ஒய்யாரமாய் நுழைந்துள்ளது.

இப்படியாகத் ‘தென்றலி’ன் செயல்பாடு நாடு முழுக்க விரிவடைந்திருந்தாலும், இன்னும் அதிகமான வாசகர்கள் தங்கள்  நிகழ்ச்சிகளை எற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். முன்பெல்லாம் மணிமன்றம் போன்ற அமைப்புகள் நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இன்றும் அந்த அமைப்புகள் இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.பெரியவர் சு.வை.லிங்கம் அவர்கள் மட்டும்தான் தீவிரம்காட்டுவது போல் தெரிகிறது. பெரும்பாலான இயக்கங்களில் தமிழ் செத்துப்போய் வெகு நாள்களாகிவிட்டன போலும்.

Vidyasagar-Chandran-Thenral-feature‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர்

நமது பெரிய பெரிய அச்சு ஊடகங்களும் அவ்வளவாக வெளியில் வருவதில்லை. பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில்தான் நமது ‘தென்றல்’ தமது பதின்மூன்றாவது ஆண்டு விழாவை ஏற்று நடத்தவுள்ளது. வழக்கமான அம்சங்களைத் தவிர பல ஆக்ககரமான முயற்சிகள் இவ்வாண்டு ‘தென்றல் ஆண்டு விழா’வில் இடம்பெறவுள்ளன. நமது வாசகர்கள் ஏதோ வந்தோம், கண்டோம், சென்றோம் என்றில்லாமல் தொடர்ச்சியான எழுத்து, கருத்துரைப்பு எனத் தொடர வேண்டும். அண்மைய சில மாதங்களில் வாசகர்களின் பின்வாங்கல் தெளிவாகவே தெரிகிறது. தற்பொழுது ‘தென்றல்’ தம் கதவை இன்னும் அகலமாகத் திறந்து வைத்துள்ளது. வாசகர்கள் ஏன் சுணக்கம் காட்டுகின்றார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

மலேசிய தமிழ்ப் பத்திரிகை உலகில் சிறுகதைக்காக ஆண்டுக்கு ஆயிரம் வெள்ளியைத் தொடர்ந்து பதின்முன்று ஆண்டுகள் வழங்கி வரும் ஏடு என்று எதையாவது குறிப்பிட இயலுமா?

வாசகர்களிடமிருந்து பணம் திரட்டிக்கொண்டா ‘தென்றல்’ தமது நிகழ்ச்சிகளை நடத்துகிறது?

வாசகர்கள் தங்களின் பங்களிப்பாகத் தமிழில் எழுதினாலே போதும். வாரந்தோறும் வீடு தேடி வரும் ‘தென்றலு’க்கு ஆண்டுச் சந்தாதாரராக உறுப்பியம் பெற்றாலே போதும். அதோடு, தங்களுக்குத் தெரிந்த உறவுகளிடம் 200 ரிங்கிட் செலுத்தி உறுப்பியம் பெற்றாலே போதும். இந்தப் ‘போதும்’ என்பதன் அர்த்தத்தை வாசகர்கள் உணர்ந்தால் நல்லது.

இந்த ஆண்டு விழாவில் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதோடல்லாமல், ஏன் இந்த இடைவெளி என்று உரிமையோடு கேட்போம். செல்லமாகத் தலையில் தட்டித் திரும்பவும் எழுதச் செய்வோம். அப்படியே, புதிய வாசகர் ஒருவரை அழைத்துவரக் கடவோம். ‘தென்றலை’ இனித் தொடர்ந்து வாசிக்கச் செய்வோம். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வாசகர்கள் பெருக வேண்டும் என்பதே நமது அவா. ‘தென்றல்’ நம் உள்ளம் தேடி வரத் தொடங்கியிருக்கிறது; கதவை அகலத் திறந்து வைப்போமா?

-ஜாசின் ஏ.தேவராஜன்