கோலாலம்பூர் – தொடர்ச்சியான சிரிப்புப் பேய்களுக்கு மத்தியில் அவ்வப்போது ‘களம்’ போன்ற படங்கள் வெளிவந்து, கை நடுக்கத்தில் கையில் இருக்கும் பாப்கார்ன் கீழே விழும் அளவிற்கு, காட்சிகளுக்கு காட்சி பயத்தை கண் முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகின்றன.
அந்த வகையில், இந்த வாரம் பயத்தில் நம்மை நடுங்க வைத்திருப்பதில், ராபர்ட் ராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய திரைப்படமான ‘களம்’ வெற்றி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
கதை என்ன?
ஊரை அடித்து உலையில் போடும் தாதாவான மதுசூதனன் (கோலிசோடா புகழ்), அமெரிக்காவில் இருந்து வரும் தன் மகனுக்காக, அந்த ஊர் எல்லையில் ஆள் அரவமின்றிக் கிடக்கும் ஒரு பாழடைந்த பங்களா ஒன்றை வளைத்துப் போடுகிறார். மராமத்துப் பணிகள் முடிந்து வீடு அழகாக அரண்மனை போல் புதுப்பிக்கப்பட, வீட்டின் முன் உள்ள இரண்டு கல்லறைகள் மட்டும் கண்ணை உறுத்துகின்றது. கல்லறைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் பூந்தொட்டிகளை வைத்து மறைத்துவிடுகின்றனர்.
வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்ட மதுசூதனன் மகன் அம்ஜத் கான், அம்மாவின் வற்புறுத்தலால், அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கே வந்து, தனது மனைவி லஷ்மி பிரியா, 5 வயது மகளுடன் அந்த பங்களாவில் வாழத் தொடங்குகிறார்.
அறைகளில் அழகான ஓவியங்கள் வைக்கலாம் என்ற யோசனையில், அந்த ஊரில் உள்ள பிரபல பெண் ஓவியர் பூஜாவை, லஷ்மி பிரியா பங்களாவிற்கு அழைத்து வர, அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சனைகள். காரணம், அந்த பங்களாவில் தீய சக்திகள் இருப்பதை அறிந்து விடுகிறார் பூஜா.
பங்களாவில் உள்ள தீய சக்திகள் என்ன? அதனால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்? ஆகியவற்றை பயத்தில் உறைய வைக்கும் காட்சிகளால் நகர்த்திச் சென்று கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தை வைத்து கதையை முடித்திருக்கிறார் இயக்குநர்.
படம் எப்படி?
முதலில் அந்தப் பாழடைந்த பங்களாவைக் காட்டும் போதே, வயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகின்றது.
கலை இயக்குநர் செந்தில் இராகவனின் கைவண்ணத்தில் அந்த பங்களா பாழடைந்த நிலையிலும், வண்ணம் பூசி மிக அழகாகவும், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் ரசிக்க வைக்கின்றது.
அதற்கு ஏற்ப முகேஸ் ஜி ஒளிப்பதிவு நமக்கு இரண்டு விதமான உணர்வுகளைத் தருகின்றது. பகலில் காட்டும் போது “என்ன அழகான பங்களா” என்று வாய்ப் பிளக்க வைக்கிறது. அதேவேளையில், இரவில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பார்க்கும் போது, “இந்த மூனு பேருக்கு எதுக்குய்யா இவ்வளவு பெரிய பங்களா? அதுவும் ஊருக்கு ஒதுக்குப்புறமா?” என்றும் அலறவும் வைக்கின்றது. அந்த வகையில் பங்களாவின் பிரம்மாண்ட்டத்தைக் காட்சிப்படுத்தியிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது ஒளிப்பதிவு.
படத்தில் நடிப்பு என்று எடுத்துக் கொண்டால், அனைவருமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மதுசூதனனுக்கும், அம்ஜத் கானுக்கும் இடையிலான அப்பா, மகன் பிரச்சனை, அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களைக் கண்டு நடுங்கும் லஷ்மி பிரியாவின் உடல்மொழி மற்றும் முகபாவனைகள், அமைதியாக எப்போதும் ஏதாவது படம் வரைந்து கொண்டே இருக்கும் சிறுமி, “என்ன செய்யப் போகிறாளோ?” என்று பதற வைக்கும் வகையில் பணிப்பெண் கனியின் வித்தியாசமான முகவெட்டு, ஓவியராக வரும் பூஜா ராமச்சந்திரன், பேயோட்டுபவராக வரும் ஸ்ரீனிவாசன் என அனைவருமே அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு சரியான தேர்வு.
திரைக்கதையைப் பொறுத்தவரையில், முதலில் 1925-ல் நடக்கும் ஒரு சம்பவம், 1985 நடக்கும் மற்றொரு சம்பவம் ஆகிய இரண்டையும் தனித்தனியே காட்டி, அதற்கான விடையை 2015-ல் சொல்லியிருக்கும் உத்தி மிகவும் ரசிக்க வைக்கின்றது. அதற்கு நாசர் கதாப்பாத்திரமும், அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் கதையும் நம்பும் வகையில் உள்ளது.
பிரகாஷ் நிக்கியின் இசையில், கபிலன் வைரமுத்துவின் வரிகளில் ஒரே பாடல் தான் என்றாலும், காட்சிகளோடு பார்க்கும் போது அது ஒரு வகையில் படத்தின் கதையை சொல்லி நம்மை திகிலில் உறைய வைக்கின்றது.
ஜோஸ் பிராங்களின் குழுவினரின் பின்னணி இசை அற்புதம். காட்சிகளில் நம்மை பயத்தில் உறைய வைப்பதிலும், இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
“இந்தச் சொத்தை கையகப்படுத்துபவரின் குடும்பமே மரணத்தைச் சந்திக்கும்”, “இராஜ குருதி கொண்டவன் அடிமையாக வாழ்ந்தால் தப்பிக்கலாம்”, “கனி .. வேண்டாம் அந்தக் கயித்த அவிழ்த்திடாத” என படத்தில் மிரள வைக்கும் வசனங்களும், அது சார்ந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்படியாக, காட்சிக்குக் காட்சி ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்துவிட்டு, கடைசியாக சொல்லப்படும் கிளைமாக்ஸ் ஒரு சிலருக்கு நிம்மதியளித்தாலும், ஒரு சில ரசிகர்களை ஏமாற்றவே செய்கின்றது.
மொத்தத்தில், ‘களம்’ – பாழடைந்த பங்களாவில் நடக்கும் ஒரு பேய் விளையாட்டு! இரவுக் காட்சி ஒன்றிற்கு சென்று படம் பார்த்து பயத்தில் உறைந்து பின் நிம்மதிப் பெருமூச்சோடு வீடு திரும்பலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்