சென்னை – நடிகர் கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். தன் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ’’என்னுடைய ‘சபாஷ் நாயுடு ‘ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 16 -ஆம் தேதி தொடங்குகிறது.
அதனால் படப்பிடிப்புக்கு போய் விடுவேன். இந்த சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்களிக்க முடியாது என்றும் சொல்லலாம். வாக்களிக்க மாட்டேன் என்றும் சொல்லலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, என் வாக்கு முன்னரே போடப்பட்டு இருந்தது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதுவும் வாக்குச் சாவடிக்குப் போன பின்னர் எனக்கு வாக்கு இல்லை என்பதை அறிந்து, நான் ஏமாற்றமடைந்தேன். விளக்கம் கேட்டபோது, வாக்காளர் பட்டியலிலேயே என் பெயர் இல்லை என்று சொல்லி விட்டார்கள் என்றார்.
ஆரம்ப காலம் முதல் வாக்களிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தி வரும் கமல்ஹாசனே இப்படிச் சொல்லலாமா என்று பரபரப்புச் சர்ச்சை கிளம்பியிருக்கும் நிலையில், கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் (வீட்டு எண் : 4/ 172 ) கமல்ஹாசன் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசைப் பட்டியலை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுக்கு அனுப்பி வைத்தார். கமலுக்கு சென்னையில் வாக்கு இருக்கிறது என தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.