மதுரை – பொதுவாக ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அந்தக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது பிரச்சாரங்கள், விமர்சனங்களின் வழி உதவி செய்வார்.
ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஈவிகேஎஸ். இளங்கோவன் தனது கடும்-சுடும் சொற்களால், தகாத விமர்சனங்களால் மற்ற சக தலைவர்களைக் காய்ச்சி எடுத்து, தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து விடுகின்றார். ஆனால், இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளில் ஓர் இடத்திலாவது வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த அளவுக்கு அவர் மீது அனைத்துத் தரப்புகளில் இருந்தும், குறிப்பாக பெண்களிடம் இருந்து, அளவுக்கதிகமான வெறுப்பும், கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பும் பெருமளவில் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெயலலிதா உளறுகிறார் என்றும், சீமானை பரதேசி என்று பொருள் படுமாறும் பேட்டியளித்ததோடு, மக்கள் நலக் கூட்டணியை சாவு ஊர்வலத்துக்கு ஒப்பிட்டும் பேசியுள்ளார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
இளங்கோவன் அடிக்கடி பிறரது மனம் புண்படும்படியான கருத்துக்களை பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். இதை அவர் தெரியாமல் செய்கிறாரா, அல்லது செய்திகளில் தனது பெயரும், கட்சி பெயரும் இருக்க வேண்டும் என்று நினைத்து விரும்பி செய்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதேநேரம், அவரது கருத்துக்கள் மிக மோசமானவை என்பதில் நடுநிலையாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு பிரதமர் மோடி, சென்று சந்தித்தபோது, தனிமையில் அவர்கள் தப்பு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று மோசமான ஒரு கருத்தை கூறியவர் இளங்கோவன்.
இதற்காக தமிழகம் முழுக்க பெரும் போராட்டங்களை அதிமுகவினர் நடத்தினர். ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல, கருணாநிதி முன்னிலையில் சில நாட்கள் முன்பு திருவாரூர் பொதுக்கூட்டத்திலும், ஜெயலலிதா பற்றி ஆபாச கருத்துக்களை பேசினார் இளங்கோவன்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இளங்கோவன் அளித்த பேட்டியொன்று இப்போது பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. காங்கிரஸ் பற்றிய நாம் தமிழர் கட்சி சீமானின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “சில பெயர்கள் அழகாகத்தான் இருக்கும். பரதேசியெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். ஆனால், அதெற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை” என்று இளங்கோவன் கூறினார்.
இதன்பிறகு பேட்டியை தொடர்ந்த இளங்கோவன் கூறியதாவது: “ஜெயலலிதா பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரமாக இல்லை. உயிர் கொல்லி பிரச்சாரமாக உள்ளது. இந்த தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம், மக்களுக்கு எதிராக உள்ளது. தேர்தலில், திமுக கூட்டணி 3-ஆவது இடத்தை பிடிக்கும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கும் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. ஜெயலலிதாவுக்கு தோல்வி பற்றிய அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டதால், அவர் உளறிக்கொண்டுள்ளார்”
“இப்போது வெளியாகும், கருத்துக்கணிப்புகள் திணிக்கப்படுகின்றன. உண்மையான கருத்துக்கணிப்பை மக்கள் தேர்தலில் தெரிவிப்பார்கள். மக்கள் நல கூட்டணியில் ஆறுபேர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர். இவர்களில் நாலு பேர் தூக்குவார்கள், ஒருவர் படுத்துக்கொள்வார். ஒருவர் சங்கு ஊதுவார். இதுதான் அந்த ஆறு பேர் கொண்ட கூட்டணி. வேறு எதுவும் அதைப் பற்றி சொல்வதற்கில்லை” எனவும் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார்.