காசி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொழிலாளர் தினத்தன்று தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.
காசியில் உள்ள கங்கை நதியில், இ-போட் (e-boat) எனப்படும் புதிய படகு சேவையை மோடி தொடக்கி வைத்து அதில் பயணம் செய்தார்.
“கங்கையில் மேற்கொண்ட படகுப் பயணம் மறக்க முடியாத அனுபவம். அடுத்த முறை காசி செல்லும்போது நீங்களும் அந்த படகுப் பயணத்தில் சென்று வாருங்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்தார்.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில் இந்த புதிய படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுச் சூழல் மாசு படுவது வெகுவாகக் குறைக்கப்படும்.
இந்த புதிய இ-படகுகள் அவற்றை இயக்கும் செலவினங்களையும் வெகுவாகக் குறைத்து, இந்த படகு சேவைகளின் மூலம் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.