சிதம்பரம் – தோல்வி பயத்தால் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; திருவாரூரில் பிரச்சாரம் செய்ய சென்றபோது, அங்கு கருப்புக்கொடி, தடிகளோடு காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களைத் தாக்க முற்பட்டனர்.
ஆனால், வாகன ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தைச் செலுத்தினார். அப்போது அவர்கள் எறிந்த தடிகள் எங்கள் வாகனத்தின் மீது வந்து விழுந்தன. பின்னர் விசாரித்தபோதுதான், திருவாரூர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்திலிருந்துதான் அவர்கள் தடிகளோடும், கொடிகளோடும், ஆயுதங்களோடும் வந்தது தெரியவந்தது.
தோல்வி பயத்தால் திமுகவினர் என் மீது இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டு மோதலை உருவாக்க முற்படுவதால், அதற்கு இடம் கொடுக்காதவாறு, கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி கண்டனம்: இந்த நிலையில், வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3-ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 21-இல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோவில்பட்டியில் வைகோவுக்கு எதிராக ஜாதி கலவரத்தைத் தூண்டிவிட முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து, வைகோ மீது மீண்டும் தாக்குதல் நடத்த திமுக-வினர் முயன்றுள்ளனர்.
திமுகவின் இத்தகைய வன்முறைத் தாக்குதலை தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.
தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து வரும் திமுக, அதிமுக வன்முறையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம் என வைகோ தெரிவித்துள்ளார்.