ஜகார்த்தா – 10 இந்தோனிசிய கப்பல் சிப்பந்திகளை விடுவிப்பதற்காக பிலிப்பைன்சின் அபு சயாப் அமைப்பினருக்குப் பிணைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என இந்தோனிசியா நேற்று அறிவித்துள்ளது.
பிணைத்தொகை வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் இந்தோனிசிய அரசாங்கம், இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்சிலுள்ள பல தரப்பினரிடமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ மார்சுடி தெரிவித்துள்ளார்.
கடத்தி வைத்துள்ளவர்களை விடுவிக்க அபு சயாப் அமைப்பினர் 50 மில்லியன் பெசோஸ் (மலேசிய மதிப்பில் 4 மில்லியன் ரிங்கிட்) பிணைத்தொகையாகக் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் மிகப் பெரிய அளவில் நடந்தன. அதன் செயல்பாடுகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அதோடு மிகப் பெரிய அளவிலான சிக்கலும் இருந்தது.” என்று ரெட்னோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, மணிலா சென்ற ரெட்னோ, அங்கு அதிபர் பெனிக்னோ அக்யுனோ மற்றும் இந்தோனிசியாவின் தொடர்பிலுள்ள அணைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.