இலண்டன் : ஐரோப்பிய நகர்களில் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்முனைகளிலும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் – இலண்டன் மாநகர் கூட அத்தகைய தாக்குதலுக்கு கடந்த காலங்களில் இலக்காகியுள்ளது என்ற நிலையில் –
அந்த மாநகரின் மாநகரசபைத் தலைவராக (மேயர்) பொதுமக்களே வாக்களித்து ஒரு முஸ்லீம் அன்பரை – அதுவும் தீவிரவாதங்களுக்குப் பெயர்போன பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை –
தேர்ந்தெடுத்திருப்பது உலகம் எங்கும் அதிர்ச்சி அலைகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சாதிக் கான்? அவரது பின்னணி என்ன? அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன? கொஞ்சம் பார்ப்போமா?
- சாதிக் இலண்டனின் முதல் முஸ்லீம் மேயர். அவரது தந்தை ஒரு சாதாரண பேருந்து ஓட்டுநராவார்.
- மனித உரிமைகளுக்காகப் போராடியிருக்கும் சாதிக் ஒரு வழக்கறிஞர். தொழிலாளர் கட்சியில் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வருபவர். அந்தக் கட்சியின் டூட்டிங் (Tooting) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட! இங்குதான் இவர் பிறந்து வளர்ந்தார்.
- இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் தான் ஒரு மிதவாதி என்று கூறுபவர் சாதிக்.
- பாகிஸ்தானிலிருந்து வந்த பெற்றோர்களைக் கொண்ட சாதிக் தென் இலண்டன் பகுதியைச் சேர்ந்தவர்.
- ஓரினத் திருமணத்தை இவர் ஆதரிப்பதால், இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, மெய்க்காப்பாளர்களை வைத்துக் கொள்ள தான் ஆலோசித்து வருவதாகவும் இவர் கூறியிருக்கின்றார்.
- நவீன சிந்தனைகளைக் கொண்ட மிதவாதியான சாதிக், தனது முதல் பிரச்சாரத்தை ஒரு மதுபான விடுதியில் (Pub) இருந்துதான் தொடக்கினார்.
- சில பிரச்சார மேடைகளில் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களை ஆதரிக்கும் சில குழுக்கள், தலைவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்ற குறைகூறல்களும் இவர் மீது உண்டு.
- இவரது மனைவியும் ஒரு வழக்கறிஞர்தான். இவர்களுக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் உண்டு. 1994இல் தனது மனைவியைக் கைப்பிடித்த இவர், மனைவியைக் காதலில் வீழ்த்த, மேக் டொனால்ட் உணவகத்தில் மீன் மாமிசத்தால் ஆன ரொட்டியை (பர்கர் – Filet-O-Fish) வாங்கிக் கொடுத்தார் என்பதோடு, இரவுகளில் சினிமாவுக்கும் அவரைக் கூட்டிக் கொண்டு போனார் என்பது மற்றொரு சுவாரசியத் தகவல்.
- விரல்-கால் நகங்களை நேர்த்தியாக வெட்டிக் கொள்வது (manicure), முக அழகு செய்து கொள்வது (facials) சாதிக் கானுக்கு பிடித்த பொழுதுபோக்கு.
- தொழிலாளர் கட்சியின் தலைவரான எட் மிலிபண்டுக்கு நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர்.
- 45 வயதான சாதிக் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர். ஒருமுறை இவர் டாக்சியில் பயணம் செய்தபோது, அந்த டாக்சி டிரைவர் இவரைப் பார்த்து “நான் முதலில் ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி என்று நினைத்தேன்” என்று கூறியிருக்கின்றார்.
- இஸ்லாம் மதக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றும் சாதிக், புனித ரமதான் மாதத்தில் குடும்பத்தோடு நோன்பு இருப்பவர். ஹாஜ் யாத்திரையும் மேற்கொண்டிருக்கின்றார். தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்தபோது சாதிக் மெக்கா புனிதப் பயணம் சென்றதால், ஹாஜ் யாத்திரை சென்ற முதல் பிரிட்டிஷ் அமைச்சர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.
- இலண்டன் மாநகரில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் முஸ்லீம்கள். பிரிட்டனின் மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் வசிப்பதும் இலண்டனில்தான். ஆனால், அதிக அளவில் ஆசியர்களும், வெள்ளையர்களும் வாழும் இலண்டனில் பெரும்பான்மை வாக்குகளில் அனைவரும் தேர்தல் மூலம் சாதிக் கானை மேயராகத் தேர்ந்தெடுத்திருப்பது – மதங்களைத் தாண்டி மனிதனைப் பார்த்திருக்கும் – இலண்டன் வாக்காளர்கள் மீதான மதிப்பை உலக அளவில் உயர்த்தியிருக்கின்றது.
-செல்லியல் தொகுப்பு