விழுப்புரம் – விழுப்புரத்தில் தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எந்நேரமும் உழைக்கக்கூடியவர்கள். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் உங்களுக்காக ஓடோடி வந்து உழைக்கக்கூடியவர்கள்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்கள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதியை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
எத்தனை முறைதான் அவர்களை திட்டுவது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பயன் அடைபவர்கள் அந்த இரண்டு கட்சியினர்தான். பெரியார், காமராஜர், அண்ணா வழியில் வந்தவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி கூறுகிறார்.
கருணாநிதி எழுதி கொடுத்து ராகுல்காந்தியை பேச சொல்லியிருக்கிறார். எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ஜெயலலிதா நகழ் எடுதுள்ளார். 50 ஆண்டு காலம், தமிழகத்தில் மாறி, மாறி திமுக-அதிமுக ஆட்சி செய்து ஊழல் புரிந்துள்ளன.
எங்கள் 6 பேர் மீது எந்த குற்றச்சாட்டாவது இருக்கிறதா? நாங்கள் யாரும் சிறைச்சாலையை பார்த்தது கிடையாது. தப்பு எங்கு நடந்தாலும் என் கண்ணுக்கு தெரியும். யாராக இருந்தாலும் அடிப்பேன்.
அடித்தவர்கள் யாராவது என் மீது புகார் செய்தார்களா? 32 மாவட்டங்களிலும் என் மீது வழக்கு போட்டார்கள். எல்லா வழக்கையும் உடைத்து விட்டு வெளியே வந்துள்ளேன்.
விவசாயத்தை என் இரு கண்களாக நினைக்கிறேன். இந்த விஜயகாந்த் மக்களுக்காகத்தான் வாழ்வான், மக்களுக்காகத்தான் வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும் என விஜயகாந்த் பேசினார்.