மணிலா – பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் இன்று பல்வேறு பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு மையங்களை நாடிச் சென்ற வேளையில், ஆங்காங்கே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள், சண்டைகளால், இதுவரை 10 பேர் வரை மரணமடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிய ஏந்திய கலவரக்காரர்கள் வாக்களிப்பு மையங்களைத் தாக்குவது, வாகனங்களைத் தாக்கியது, வாக்கு எண்ணும் இயந்திரங்களைக் களவாடிச் சென்றது போன்ற சம்பவங்கள் நடந்தேறியதாக பிலிப்பைன்ஸ் காவல் துறை அறிவித்துள்ளது.
இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது நூற்றுக்கணக்கான தீவுக் கூட்டங்களைக் கொண்ட இந்த நாட்டில், பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாகவே நடந்தது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொசாரியோ என்ற ஓர் இடத்தில் மட்டும் நடந்த மிக மோசமான தாக்குதலால் 7 பேர் அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் பகுதி எப்போதுமே அரசியல் வன்முறை சம்பவங்களுக்காக பிரசித்தி பெற்ற இடமாகும்.
இருப்பினும் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஆங்காங்கு நடத்த தனிப்பட்ட, உள்ளூர் வன்மங்களால் ஏற்பட்டவை என்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய அதிபர் தேர்தலில் போட்டியிடும், ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்) அந்நாட்டின் அடுத்த அதிபராக வெற்றி பெறும் வாய்ப்பு கொண்டவராகக் கருதப்படுகின்றார்.