Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 2 – கலைஞர் களமிறங்கும் திருவாரூர்!

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 2 – கலைஞர் களமிறங்கும் திருவாரூர்!

809
0
SHARE
Ad

karunanidhiதமிழக சட்டமன்றத் தேர்தல்களில் நட்சத்திரத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் தொகுதிகளின் வரிசையில் இரண்டாவதாக நாம் பார்க்கவிருப்பது கலைஞர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதிதான்.

1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு முதல் முறையாக  சட்டமன்றப் பேரவைக்குள் காலடி எடுத்து வைத்த கலைஞர் அதன்பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றார் – தொகுதிகள் மட்டுமே மாறியிருக்கின்றன!

வழக்கமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போட்டியிடும் கலைஞர் கடந்த 2011ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு, தனக்கு அடுத்த நிலையில் இருந்த அதிமுக வேட்பாளரை விட  50,249  வாக்குகள் பெரும்பான்மையில்  வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்தலிலும், தனது 93வது வயதில், தள்ளுவண்டியில், தள்ளாத வயதில் இருந்தாலும், தளராத மன உறுதியுடன் களம் காண்கிறார்.

Karunanithi-mother -nomination-திருவாரூரில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக கலைஞர் தனது தாயாரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய காட்சி…

அவர் வெற்றி காண்பது ஏறத்தாழ உறுதி என்றாலும், கடந்த தேர்தல் போன்று இல்லாமல் பலமுனைப் போட்டி நிலவுவதால், வாக்குப் பெரும்பான்மை குறையக் கூடும்.

1996 முதல் வரிசையாக நான்கு பொதுத் தேர்தல்களிலும் திமுகவே திருவாரூர் தொகுதியில் வென்று வந்துள்ளது என்பது கருணாநிதிக்கு சாதகமாகப் பார்க்கப்படும் ஓர் அம்சமாகும்.

உடல் நலம் கருதி பெரும்பாலும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதிக்குப் பதிலாக அவரது குடும்பத்தினர் திருவாரூர் தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இறுதி நிலவர புள்ளிவிவரப்படி திருவாரூரில் 1,25,424 ஆண்களும், 1,27,029 பெண்களும், 13 திருநங்கையரும் உள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எஸ். மாசிலாமணி போட்டியிடுகின்றார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக தென்றல் சந்திரசேகர் இந்தத் தொகுதியில் களம் காண்கின்றார்.

பாஜக சார்பில் ஸ்ரீ என்.ரெங்கதாஸ் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

இத்தனை பேர் இருந்தாலும், கருணாநிதியை எதிர்த்து அதிக அளவில் வாக்குகள் பெறக் கூடிய சக்தி வாய்ந்த கட்சியான அதிமுக சார்பில் ஏஎன்ஆர் பன்னீர் செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார்.

மீண்டும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால், அநேகமாக இரண்டு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக கருணாநிதி உருவெடுப்பார். முதலாவது, 93வது வயதில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவது.

இரண்டாவது, 1957 முதல் அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக வென்று வந்திருப்பது இந்தியாவிலேயே கலைஞர் ஒருவராகத்தான் இருப்பார்.

இந்த முறையும் வென்று அந்த சாதனைகளைப் புரிவாரா?

-செல்லியல் தொகுப்பு