வாஷிங்டன் – சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தோரின் பட்டியலை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அந்நிறுவனம்.
மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பிரபலங்கள் சொத்துகளை பதுக்கி உள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும், பனாமா நாட்டைச் சேர்ந்த “மொசாக் ஃபொன்சேகா’ என்ற அந்த சட்ட நிறுவனம், முதலீடு, சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பல்வேறு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை தொடர்பான ஆவணங்கள் அந்த சட்ட நிறுவனத்திடம் உள்ளன.
பனாமா நிறுவனத்தின் கைவசம் இருந்த இந்த ஆவணங்களில் சில பகுதிகளை ரகசியமாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டனர்.
பணம் பதுக்கியவர்களில் முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அடங்குவர்.
இந்நிலையில், பனாமா ஆவணங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்களை தங்களது ‘offshoreleaks.icij.org’ என்ற இணையப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இந்த இணையத்தளத்தில் தற்போது காணலாம்.