சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய செய்தித் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய விரிவான கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மிகவும் விரிவான, விஞ்ஞானபூர்வமான கருத்துக்கணிப்புகள் இவை என அந்த தொலைக்காட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், திமுக கூட்டணி 66 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் 4 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நியூஸ் 7 தமிழ் – தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்புகள்
மற்றொரு தொலைக்காட்சியான ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டன. அதன்படி திமுக கூட்டணி 141 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கும் என அந்தத் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிமுக 87 தொகுதிகளை மட்டுமே பெறும் என்றும் பாமக 2 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 1 தொகுதியிலும், பாஜக 1 தொகுதியிலும் வெல்லும் என்றும் நியூஸ் 7 கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக- அதிமுக இடையில் கடுமையான போட்டி நிலவி, இரு கட்சிகளுக்கும் இடையில் சரிசம வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் பலத்த சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது அதற்கு நேர் எதிர்மாறாக, புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மற்றொரு முன்னணி செய்தித் தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்புகள் கடந்த சில நாட்களாக கட்டம் கட்டமாக, தொகுதி வாரியாக, அந்த தொலைக்காட்சியின் அலைவரிசையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதன் இறுதி நிலவரம் – அதாவது கட்சிகள் எத்தனை தொகுதிகள் வெல்லும் என்ற முடிவுகள் – இன்னும் வெளியிடப்படவில்லை.