Home Featured தொழில் நுட்பம் “மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்”

“மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்”

1358
0
SHARE
Ad

(மின்னூல் (e-books) என்ற புதிய தொழில்நுட்ப வடிவத்திற்குள் தமிழ் மொழி அடுத்த கட்டப் பயணத்திற்கு தயாராவது குறித்து முத்து நெடுமாறன் கைவண்ணத்தில் உருவான இந்தக் கட்டுரை அண்மையில் செல்லினம் குறுஞ்செயலியில் இடம் பெற்றது. அதனை செல்லியலில் மறு-பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)

Sellinam-Website-Image-மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. முழுமையான மின்னூல் வடிவில் பெரும்பாலானவை இல்லை என்றாலும், மின் வடிவில் பதிப்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் தமிழ் எழுத்தாளர்களிடையே பரவலாகத் தோன்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இலக்கியங்களை இணையத்தில் பக்கங்களாகப் பதிப்பிப்பது வேறு. அவற்றை மின்னூல்களாகப் பதிப்பிப்பது வேறு. அச்சு வடிவில் பதிப்பிக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கும் மின்னூலாகப் பதிப்பிக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மின்னூல்களைத் தாளில் அச்சிட வேண்டியதில்லை. அவ்வளவுதான். ஒரு நூலுக்கு இருக்க வேண்டிய இலக்கணம் மின்னூலுக்கும் இருக்கவேண்டும்.  படைப்புகள் அனைத்தையும் ஒரு கோப்புக்குள் போட்டு, அதனை பி.டி.எப். ஆகப் பதிவு செய்வதால் மட்டும்  அது மின்னூல் ஆகிவிடாது.

#TamilSchoolmychoice

புதிதாக வெளிவரும் படைப்புகள் பெரும்பாலும் இன்றும் அச்சு வடிவிலேயே முதலில் வெளிவருகின்றன. சில ஆண்டுகள் கழித்தே அவற்றுள் சில மின்னூல்களாகத் தோன்றுகின்றன. இதில் எந்தத் தவறும் இல்லை. மின்னூல் வடிவில் அவை மறுவாழ்வு காணும் போது அவை நிலைத்து நிற்கும் வாய்ப்பைப் பெறுகின்றன.

ஏற்கனவே அச்சுவடிவில் வெளியிடப்பட்ட தமிழ்  நூல்களை மின்னூல்களாகக் கொண்டுவரும் முயற்சிகள் தன்னார்வம் கொண்ட சிலரால் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூர்த் தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு

சிங்கப்பூர் தன்னுரிமை பெற்ற 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் மின்வடிவம், “சிங்கப்பூர்த் தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு” என்னும் திட்டத்தின் கீழ்க் கடந்த ஆண்டு அந் நாட்டு நூலக வாரியத்தினால் அவர்கள் இணையத் தளத்திலேயே பதிப்பிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய ஒரு திட்டம், தமிழ் நூல்களுக்காகச் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.

Singapore Tamil Digital Collection

தமிழ் விக்கிமூலம்

உலகளவில் ‘தமிழ் விக்கிமூலம்’,  தமிழ் நாட்டில் நாட்டுடைமையாக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட  நூல்களை மின்வடிவில் ஏற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக பி.டி.எப். வடிவில் சேர்க்கப்பட்ட இந் நூல்களின் கோப்புகளை இங்குக் காணலாம். இவை அனைத்தும் மின்னூல் வடிவிலும் படிப்படியாக மாற்றப்படுவதற்கானத் திட்டத்தையும் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

கூகுளின் ஒளிவழி எழுத்துணரி (ஓ.சி.ஆர்.) கருவியைக் கொண்டு இந் நூல்களின் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்பதையும், உலக மொழி விக்கிமூலங்களில் தமிழ் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதையும் அண்மையில் அறிவித்திருந்தார்கள். இது மகிழ்ச்சியும் பெருமையும் படக்கூடிய ஒரு செய்தி. இந்தத் திட்டத்திற்கான ஊக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் வழங்கி வருகிறது.

Muthu Nedumaran-Tamil e-books

மலேசியத் திட்டங்கள்

மலேசியாவிலும் தன்னார்வ அடிப்படையில் சிறுசிறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியக் கடல் என்று பெயர்பெற்ற இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் மறைந்த ஓராண்டுக்குள், ‘உங்கள் குரல்’ என்னும் பெயரில் அவர் நடத்திவந்த தமிழ் இதழ்கள் அனைத்தும் அப்படியே  பி.டி.எப். ஆகவும், மின்னூல் வடிவிலும் ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் இணையத் தளத்தில் பதிப்பிக்கப்பட்டன.

அண்மையில், மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களும், பெரும்பாலான சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகளும் “மலேசியாவிலிருந்து ரெ.கா”, என்னும் அவருடைய வலைப்பூத் தளத்திலேயே வெளியிடப்பட்டன.Muthu Nedumaran-Tamil e-books-Re Ka books

மலேசியாவில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஒன்றனைக் கொண்டுவரப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வெளியிடப்பட்ட நூல்களை மின்பதிப்புகளாகக் கொண்டுவரும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், புதிய படைப்புகள் அச்சு வடிவத்தில் வெளிவரும் அதே நேரத்தில், மின்னூல் வடிவிலும் இனி வெளிவரும் என்று எதிர்ப்பார்ப்போம்.

இணைப்புகள்:

  1. சிங்கப்பூர்த் தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு
  2. தமிழ் விக்கிமூலம்
  3. தமிழ் விக்கிமூலத்தில் பி.டி.எப். கோப்புகள்
  4. உலக மொழி விக்கிமூலங்களில் தமிழ் ஆறாவது இடம்
  5. நல்லார்க்கினியர் நற்பதிவுகள்
  6. மலேசியாவிலிருந்து ரெ.கா