கோலாலம்பூர் – ஒட்டுமொத்த மலேசியாவும் காத்திருந்த அந்த நாள் இன்று தான். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மானை நேரில் காண, அவரது குரலை நேரடியாகக் கேட்க இன்று காலை முதல் ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணி எண்ணி நகர்த்திக் கொண்டிருந்தனர் மலேசிய ரசிகர்கள்.
டிக்கெட் விலை மிகக் கூடுதல் என்ற போதிலும் கூட, அந்த முகம், அந்தக் குரலுக்காக ரசிகர்கள் கணக்குப் பார்க்கவில்லை. காலை முதல் பேஸ்புக், வாட்சாப், டுவிட்டர் என ஏ.ஆர்.ரஹமானைக் காணப் போகும் ஆவல் தான் பதிவுகளாய் இருந்தது.
ஆனால் அப்படி ஒரு எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியிருக்கிறது.
ஸ்டேடியம் மெர்டேக்காவில் இரவு 8 மணிக்கு ஆரம்பித்திருக்க வேண்டிய நிகழ்ச்சி இப்போது மணி 11.30 ஆகிவிட்டது. 15 நிமிடங்களுக்கு முன்னர் தான் நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதம்.
இதில் போதாக்குறைக்கு இடியுடன் கூடிய கனமழை வேறு கொட்டிக் கொண்டிருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் ரஹ்மானின் முகம் காணப் பலர் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
இன்னும் பல ரசிகர்கள் கனத்த மழையில் கனத்த இதயத்துடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக பேஸ்புக்கில் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள், தற்போது நிலவி வரும் வானிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? ஸ்டேடியத்தில் இப்படி திறந்த வெளியிலா ஏற்பாடு செய்வது என்றும் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர்களின் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் இந்நிகழ்ச்சியில் இசைப்புயல் பாடப் போகும் பாடல்கள் தீர்த்துவிடும் என நம்புவோம். பொறுமையுடன் காத்திருப்போம்.
படம்: பேஸ்புக் (தயாளன்)