மும்பை – இந்தியாவில் தனக்குச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என உறுதி அளித்தால் கண்டிப்பாக இந்தியா வந்து அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக விஜய் மல்லைய்யா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனில் 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவையைச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தனது கடனை திருப்பிச் செலுத்துவதற்காக எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழுவிற்குப் புதிய கடன் செலுத்தும் திட்டத்தை அளித்துள்ளார்.
இந்நிலையில் ‘யுனைடெட் பிரிவரீஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் முக்கியக் கூட்டத்தில் லண்டனில் இருந்தபடியே காணொளி மூலம் கலந்துகொண்டார்.
லண்டனில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறை தோற்றுப்போனது. அவர் லண்டனுக்குச் சென்று 60 நாள் ஆனது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடந்த யுனைடெட் பிரிவரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இக்கடன் பிரச்சனையின் மூலம் நிறுவனம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் குறித்து விவாதிக்கப்பட்டது.
இப்பிரச்சனைகளைக் களையவும் கடனைத் திருப்பிச் செலுத்தவும் தான் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் காணொளி மூலம் கலந்துகொண்ட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் யுனைடெட் பிரிவரீஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான ஹெயின்கென் நிறுவனம் நிர்வாகம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவி செய்யவும் ஆதரவும் அளிக்கவும் உறுதி அளித்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் ஹெயின்கென் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனக்குச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என உறுதி அளித்தால் கண்டிப்பாக இந்தியா வந்து அனைத்துக் கேள்விகளுக்கும் தான் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.