கோலாலம்பூர் – விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அத்தகைய மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற ஆரூடங்களும் தற்போது எழுந்துள்ளன.
நீண்ட காலத்திற்குப் பின்னர் 2011ஆம் ஆண்டில் இரண்டு அமைச்சர்களைப் பெற்ற மஇகா, அதன்பின்னர் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு அமைச்சரவையிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பழைய நிலைமைக்கே – அதாவது ஒரே ஒரு அமைச்சருடன் இயங்க வேண்டிய நிலைமைக்கு – திரும்பி விட்டது.
இந்நிலையில் நஜிப் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் மஇகாவுக்கு மீண்டும் இரண்டாவது அமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அறைகூவல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.
மஇகா இளைஞர் பகுதியின் வேண்டுகோள்
அமைச்சரவை மாற்றம் குறித்து மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ் சந்திரன் (படம்) விடுத்துள்ள அறிக்கையில் 2014 காலகட்டத்தில் இருந்ததைப் போன்று மஇகா இரண்டு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் சூழலுக்கு மாற நஜிப் இரண்டாவது அமைச்சர் பதவியை மஇகாவுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கட்சி இப்போது டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் ஆற்றல்மிக்கத் தலைமைத்துவத்தின் கீழ், ஒற்றுமையுடனும் வலுவுடனும் திகழ்கின்றது. கட்சியின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டு, தற்போது 14வது பொதுத் தேர்தலை நோக்கி, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள, வலிமையுடன் கட்சியைச் செலுத்தி வருகின்றார் அவர்” என்று சிவராஜ் மேலும் கூறியுள்ளார்.
கட்சிக்கு எதிர்ப்பாகச் செயல்பட்டு வந்தவர்கள் தற்போது மீண்டும் கட்சியில் இணைந்திருக்கின்றனர் என்றும் டாக்டர் சுப்ராவின் ஆற்றல்மிக்கத் தலைமைத்துவம் இதனால் கூடுதல் பலம் பெற்றிருக்கின்றது என்றும் சிவராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் மஇகாவை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் மஇகாவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்றும், இரண்டாவது அமைச்சர் பதவி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு வழங்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.